பக்கம் எண் :
 
மற

மற்று,-

    வண்டு - வண்டர்; சுரும்பு - சுரும்பர்; நுனிக்கொம்பர் (கொம்பு -
திருக்குறள்) என வருவது புதிய கூட்டு மாற்றமன்றி ஈட்டு மாற்றமன்று.

324. நூ: ஐஒலிப் போக்கில் அவ்வும் சிறுபால்
        நவ்வொலி ஞவ்வுமாய் முதலிடை ஒலிக்கும்.

    பொ: ஒலிப்போக்கில் பெரும்பாலும் ஐக்கு மாற்றாக அவ்வும் சிறுபால்
நகரத்துக்கு மாற்றாக ஞவ்வும் போலியாய்ச் சொல்லின் முதலிலும்
இடையிலும் ஒலிக்கும்.

    மையல் - மயல், பையல் - பயல், மையிர் - மயிர், நிலையம் - நிலயம்,
பழைமை - பழமை, பேதைமை - பேதமை.  ஐந்திலே - அஞ்சிலே (கம்பரா)
செய்ந்நின்ற - செய்ஞ்ஞின்ற (தேவாரம்) நண்டு-ஞெண்டு, நமன் - ஞமன். 
கவவுக்கை ஞெகிழாமல் (சிலம்பு).

    அன்னை என்னும் சொல்லிடைப்பட்ட ‘ன’வ்வொலி நகரத்திரிபொத்து
அஞ்ஞை என வழங்கப்படும். இந்நூற்பாச் செய்தியை நன்னூல்,
    ‘சஞமுன் மட்டே அஐ ஒக்கும்’ என்பதும்

    ‘ஐ-தனிக்குறிலடுத்த யம்மெய்வழி ந-ஞ உறழும்’ என்பதும் நம்
எடுத்துக்காட்டுகளை அடக்காமை உணர்க. போலிச் சொல் மூவிடத்து
வரும்போது முதலிடை கடையென அவ்விடப் பெயர் பெறும்.

பயன் திரிபு

325. நூ: திரியும் சிலபெயர் பிறிதொரு பொருட்பயன்
        தருவ துண்டேல் தனிச்சொல் லாமே.

    பொ: பெயரின் திரிபுகளுள் சில வேறொரு பொருள் கொடுப்பின் ஒரு
தனிச் சொல்லாகவே இயங்கும்.

    செல்வம்-செல்லம், செம்பு-சொம்பு, எள்+நெய்=எண்ணெய். 
கண்+ஆடி=கண்ணாடி, உருவு=உருவம் --> உருபு (வேற்றுமை உருபு) முடிவு
(இறுதி) - முடிபு (தீர்மானமாய் இருத்தல்), எயிறு-(பல்) ஈறு-பற்கதுவுதசை.

            நாற்றத்தினை நாத்தம் என்னும் வழக்குத் திரிபு தீ நாற்றத்தைக்
குதிப்பதாய்க் கொளலாமோ எனின் ஆகாது நாற்றம் இழிபொருளுறினும்
மணம் நன்னாற்றத்தைக் குறித்தலின்.