பக்கம் எண் :
 
6

6. ஒழிபியல்


342. நூ: பண்டை இலக்கணம் இலக்கியம் பயில்வார்
        கண்டுணர் தற்குமுன் வைப்பினில் விடுத்த
        உரி, வினைக் குறிப்பு, சார்பு, ஒலி பெயர்ப்பை
        விரித்துரை செயாமல் வேண்டுவ துரைப்பாம்.

    பொ: பண்டை இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கண்டு பயிலப்
புகுவார் உணர்தற்கு எளிமையாய், முன்னியல்களில் வையாது விடுத்து
உரிச்சொல், குறிப்புவினை, சார்பெழுத்துகளை விரித்துரைக்காமல் மறுக்கும்
முகத்தானே விளங்க வேண்டுவனவற்றைக் கூறுவாம்.

    வி: இலக்கியத்திற்கு யாம் விளக்கியனவே சால்பாக இலக்கணம்
காண்பார்க்கு இடர் போக்கவே முதன்மை எனற்கு முன் நின்றது. 
இலக்கியத்தும்-

        தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
        வீழா இறக்கும் இவள் மாட்டும்-(நாலடி-14)

    என்றிங்கு முற்கூறிய ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமோ,
வினையெச்சமோ (எதிர்மறைப் பலவின்பால் முற்றோ) ஆகாமல் செய்து
என்னும் திறனுடை ‘செய்யா’ என்னும் வாய்பாட்டு வினையெச்சம் எனக்
கொளல் முற்கூறாமை போலும் கொளல் என்க.

    தொல்காப்பியர் உறழ்ச்சி என்றதை நன்னூலார் விகற்பம் என்றதும்,
கிளவி என்ற சொல்லை இரட்டைக்கிளவி என்ற இடத்தன்றி வேறு
ஆளாமையும் போன்ற தனிச்சொல்லாய்வில்லை.

உரிச்சொல்

343. நூ: ஒருசொல் பலபொருட் குரிமை யாயும்,
        பலசொல் ஒருபொருட் குரிமை யாயும்,
        செய்யுட் குரியதாய் வருமெனப் படும்உரி
        பெயர்வினை முன்னடை யாய்வரும் பண்பே.

    பொ: ஒருசொல்லே பலபொருளை உணர்த்தும் உரிமை உடைத்தாகி வருதலும், பல சொற்கள் ஒரு பொருளையே உணர்த்தல் உரிமை பெறுதலும் கொண்டு செய்யுட்கே மிகவும் உரித்தாகி வரும் என்று சொல் விளக்க முறையில் இலக்கண நூல்களில் கூறப்படும் உரிச்சொற்கள் உண்மையில் பெயர்வினை இரண்டற்கும் முற்படும் அடையாய் வரும் தன்மையை உடையது.