பக்கம் எண் :
 
New Page 1

குறிப்பு வினை

350. நூ: இயல்புப் பெயர்போல் அறுவகைப் பெயர்முன்
        இறுதி நிலைமூ விடத்தும் ஏறி
        வருவதோர் வகையைக் குறிப்பாய்க் காலம்
        உரைப்பதாய்க் கொண்டு வினைக்குறிப்(பு) என்பர்.

    பொ: பெயரினியல்பே போல் ஆறுகூறான பெயர்களின்பின்
மூவிடத்திற்கும் உரிய இறுதி நிலைகள் ஏறிவரும் ஒருவகைச் சொற்களைக்
குறிப்பாகக் காலங்காட்டுவதாகக் கொண்டு குறிப்புவினை என்று தொன்மைச்
சான்றோர் வகுத்துரைப்பர்.

    குறிப்பாய்க் காலங்காட்டுவதால் குறிப்புவினை என்பது பெயர்க்
காரணம்.  சான்றுகள் பின்னுள.

351. நூ: ஆறன் ஏழன் உருபு விரிய
        ஆறு பெயரினும் ஏறும் இறுதியும்
        அன்மை இன்மை உண்மை வன்மைமுதல்
        தன்மைக் குறிப்புகள் ஒப்புச் சொற்கள்
        என்வினா கண்ணுரு(பு) இறுதியும் குறிப்புவினை,

    நு: இந்நூற்பா குறிப்பு வினையின் முழுப் பண்புணர்த்தல் நுதலிற்று.

    பொ: ஆறாம் வேற்றுமையின் உடைமைப் பொருளில் உருபு
விரியுமாறும், ஏழாம் வேற்றுமையின் இடப்பொருளில் உருபு விரியுமாறும்,
ஆறுவகைப் பெயர்களில் ஏறிவரும் ஐம்பால் இறுதிகளும் அன்மை இன்மை
உண்மை ஆகிய பொருளுடைய அன்று இல்லை உண்டெனும் சொற்களும்,
வன்மை முதலிய தன்மை குறிக்கும் சொற்களும், ஒப்புரைக்கும் சொற்களும்,
என் என்னும் வினாவும் கண் என்னும் உருபும் மேற்கொளும் இறுதிகளும்
குறிப்பு வினைச்சொல் அமைப்பு என்பர்.

    கையது வேலே (புறம்) பாடல் ஆறன் இடம் ஆதல் காண்க. 
வினைக்குறிப்பு என்பது குறிப்பு வினையென மாற்றியும் கூறலாம் என்பது. 
மற்று, பொருள், சினை, குணம், தொழில் என்னும் நான்கும் உடைமை
பற்றியும் இடம், காலம் இரண்டும் இடம்பற்றியுமே அடங்கலின்
தொல்காப்பியத்தில் நன்னூலையும், மற்று, இடம், உடைமை இன்னதென
விரிவேண்டி நிற்றலின் நன்னூலொடு தொல்காப்பியத்தையும்
பொருத்தினோம்.