395. நூ: செய்வினை செயப்படு வினையாய் மாறச்
சொல்லிடை நிகழ்வெதிர் பொழுதில்
‘படு’வும்,
இறப்பில் ‘பட்டு’வும் புகுத்திக் கூறல்.
பொ: செய்வினையைச் செயப்பாட்டு வினையாய் மாற்ற அச்சொல்லின்
இடையே நிகழ்கால, எதிர்காலச்
சொற்களில் ‘படு’ என்பதையும்,
இறந்தகாலத்தில் ‘பட்டு’ என்பதையும் புகுத்திக் கூறவேண்டும்.
சா: நி:- மாணாக்கர் ஆசிரியரை மீறுகின்றனர்.
மாணாக்கரால் ஆசிரியர் மீறப்படுகின்றனர்
எ:- மாணாக்கர் ஆசிரியரை மீறுவர்
மாணாக்கரால் ஆசிரியர் மீறப்படுவர்
இ:- மாணாக்கர் ஆசிரியரை மீறினர்
மாணாக்கரால் ஆசிரியர் மீறப்பட்டனர்.
இதுபோன்று பிறவும் இயலும்.
தன்வினை
- பிறவினை
396. நூ: எழுவாய் வினையை நேருறக் கூறல்
அயலுக் கெழுவாய் ஆற்றுவ துரைத்தல்
முறையே தன்வினை பிறவினை யாகும்.
பொ: எழுவாயின் வினையை நேரே கூறுதலும், அவ்வெழுவாய்
அயற்பொருளுக்கு ஆற்றிய வினையைக் கூறுதலும்
முறையே தன்வினையும்,
பிறவினையும் ஆம்.
சா: மக்கள் பழத்தை வெட்டுவர்; மரத்தை வெட்டுவிப்பர்.
இராசராசன் பெருங்கோயில் கட்டினான்.
இராசராசன் பெருங்கோயிலைக் கட்டுவித்தான்.
இவ்விரண்டனுள் முதல்தொடரில் பிறவினை மறைந்து வந்ததன்று.
முதலது பொருளாண்மையும், மற்றது செயலாண்மையும்
பற்றியமைந்தன.
397. நூ: தன்வினை பிறவினை யாக, வினையை
முதனிலை யடுத்துச் செறித்தலும், முதனிலை
மெலியை வலித்தலும் வலியிரட் டலுமாம்.
பொ: தன்வினையைப் பிறவினையாக மாற்றுவதற்கு ‘வி’யையும்
‘பி’யையும் சில முதனிலையை யடுத்து ஏற்ப
இயைத்தலும், சில முதனிலையின் மெல்லினமெய் வல்லினமாதலும், சில வலி இரட்டித்தலும்
ஆம்.
|