46. நூ: அதுவே,
வினைபெயர் இரண்டாய் ஐந்தொகை யாய
திணைபால் எண் இடம் காலம் காட்டும்.
பொ: சொல், வினை, பெயர்
என்று இரண்டு பிரிவாய் ஐந்தொகை
என்று இலக்கணத்துச் சிறப்பிக்கத்தக்க திணை, பால், எண்,
இடம், காலம்
இவற்றைக் காட்டும்.
வி:
முற்று வினை ஐந்தையும்காட்டலின் முற்கூறப்பட்டது. பெயர்
காலந் தவிர்ந்தனவே காட்டுமெனினும்
வினையாலணையும் பெயர்
காலத்தையும் காட்டலின் ஐந்தொகைக் குரித்தாயிற்று.
சா:
நடந்தான், தோழன், நடந்தவன்.
ஐந்தொகை
47. நூ: முழுவுலகத்தையும் தழுவ நோக்கி
ஒழுக்கப் பொருளில் வகுத்த திணையில்
மாந்தர் உயர் திணையாகவும் மற்றை
உயிருடையனவும் உயிரில்லனவும்
அஃறிணையாகவும் அமைக்கப்படுமே.
பொ:
உலக முழுவதையும் ஊடுருவி நோக்கி ஒழுக்கம் பற்றிய
கருத்தில் தமிழில் வகுத்துள்ள திணைப்
பிரிவில் உயர்வொழுக்கம் வாய்ந்த
மாந்தரை உயர்திணையாகவும், பிற உயிருள்ளவற்றையும்
உயிரில்லாதவற்றையும்
அஃறிணையாகவும் அமைத்துக் கொள்ளப்படும்.
சா:
கோவலன், கண்ணகி - உயர்திணை.
கிளி, யானை, வாழை, மலை - அஃறிணை.
திணைக்குக் குலப்பொருள் கூறலும், அறிவுப் பொருள் கூறலும் ஒழுக்கச்
சார்பாய் அமைவன ஆதலின்
அனைத்தும் அடங்க ஒழுக்கம் எனப்பட்டது.
48. நூ: மாந்தர் போன்று மனமுடைத்தாக
நூல்கள் புனைந்து நுவலப் படுவோர்
உயர்திணைக்குரிய பெயர்வினை பெறுவர்.
பொ:
மாந்தர் போன்று அறிவுடைப் பொருளாக நூல்களில் உயர்த்திக்
கூறப்படுவோர் பெயராலும் வினையாலும்
உயர்திணையாவர்.
|