பக்கம் எண் :
 
New Page 1

    நேர்:-”என் சுடலை நீற்றை வணங்காமல் நாடு முற்றும் வாரி இறைக்க
வேண்டும்.” என்று நேரு எழுதியிருந்தார்.

    நேரல்:-தன் சுடலை நீற்றை வணங்காமல் நாடு முற்றும் வாரி இறைக்க
வேண்டுவதாக நேரு எழுதியிருந்தார்.

410. நூ: மாற்றும் போதில் நாளை இன்று
       நேற்(று)எனும் நாட்பெயர் ஒருநாள் தள்ளியும்,
       அண்மைச் சுட்டுகள் சேய்மை ஆகியும்
        நிகழ்வெதிர் காலம் இறந்தும் நேரும்.

    பொ: நேர்க்கூற்றை அயற்கூற்றாக்க, சில சொல் மாற்றும் பொழுதில்
நாளை, இன்று, நேற்று என்பன தம் கால எல்லையில் இன்னும் ஒருநாள்
தள்ளியும், அண்மைச்சுட்டுச் சொற்கள் சேய்மைச்சுட்டுச் சொற்களாகியும்,
நிகழ்காலமும் எதிர்காலமும் இறந்தகாலமாகியும் நேர்ந்துபடும்.


சா: நேர்:- நேரல்:-
  இது அது
  இவை அவை
  இன்று அன்று
  நாளை மறுநாள்
  நேற்று முன்னாள்
  இதனால் அதனால்
  இங்கு அங்கு
  இந்த அந்த
  இப்பொழுது அப்பொழுது
  நான், நீ அவன், தான்

நேர்:-“போர்க்கு இன்றுபோய் நாளைவா”. எனக் கோசல நாடுடை வள்ளல்
கூறினான்.

நேரல்:-போருக்கு அன்றுபோய் மறுநாள் வருமாறு கோசல நாடுடை
வள்ளல் கூறினான்.

நேர்:-“நான் இதை எடுத்து வருகிறேன்.” என்று உரிமை கொண்டாடினான்.

நேரல்: அவன் அதை எடுத்து வருவதாக உரிமை கொண்டாடினான்.

நேர்: “இங்கு வாருங்கள்; இந்தத் தட்டை வாங்குங்கள்.” என்று கோயிற்
கடையினர் நச்சரிக்கின்றனர்.

நேரல்: அங்கு வரும்படியும், அந்தத்தட்டை வாங்கும்படியும் கோயிற்
கடையினர் நச்சரிக்கின்றனர்.