அடைவு
அ) செய்தித் தாள்கள் இதழ்கள் மொழியின்
வரிவடி வத்தையும் வானொலி திரைப்படம்
ஒலிவடி வத்தையும் உயர்த்தும் தகையன.
ஆ) பேச்சு வழக்கின் பிழைகள் சுருங்கவும்
எழுத்து வழக்கின் இறுக்கம் அவிழவும்
மொழியை நடத்தல் தமிழர் கடனே.
இ) ஒருமொழிப் பயில்வில் ஆர்வத் தேவை
ஒருகால்; நூல்கால்; இலக்கணம் மறுகால்;
உறுமுக் காலொடு கால்சொற் களஞ்சியம்.
ஈ) பண்டைத் தண்டமிழ் நூல்கள் ஒவ்வொன்றும்
கண்டுளங் கொள்வத னோடிந் நூறில்-
மறைமலை யடிகளார், திரு.வி.க., சோம
சுந்தர பாரதி, இரா.பி. சேது,
ந.மு. வேங்கட சாமி, உ.வே.சா.,
கி.வா.செ., சி.இலக் குவனார், மு.வ.
வள்ளலார், பாரதி, பாரதி தாசன்
பெருஞ்சித் திரன்உரை பாநடை கொளலே
உ) சொற்பொழி வாற்றலால் மக்களைக் கூட்டியோர்
முற்படக் கூறிய நூலவ ரோடும்
மு.கதி ரேசனார், ஞானியார் அடிகள்,
அண்ணா, கிருபா னந்த வாரியார்,
மா.பொ.சி., குன்றக் குடிமடத் தடிகள்;
சீரியர் செப்பிய பேரொடு சிலர்உளர்.
ஊ) செந்தமிழ்ப் பற்றொடு நாடக மியற்றியோர்
சுந்தர னாரும் பரிதிமாற் கலைஞரும்.
எ) விபுலா நந்தரும் ஆபிர காமும்
இசைத்தமிழ் நூலிற்(கு) எழுச்சி இருவர்.
ஏ) இற்றை நிகழும் பாட்டரங் கங்கள்
பட்டிமன் றங்கள் பொருளிலும் சொல்லிலும்
எப்புதுப் பயனும் விளைத்தில; முன்னுள
இலக்கிய அரசியல் பொழிவு போல
முழுது போக்கும் பொழுது போக்கே.
|