பக்கம் எண் :
 
New Page 1

வேற்றுமை

66. நூ: பொருள் வேறாதல் வேற்றுமை; அதனை
       இயற்றிடும் உருபால் எண்வகை யாகுமே.

    பொ: ஒரு சொல்லின் பொருளைக் கொண்டு செலுத்தித் தொடர்ப்
பொருளை வேறுபடுத்தல் வேற்றுமை.  அவ்வேற்றுமைப் பண்பை ஆக்கிடும்
உருபின் வகையால் வேற்றுமை எட்டாகும்.

    விரி: பண்டைத் தமிழ்ச் சான்றோர் வழக்கு முற்றி இலக்கியம் எழும்
காலத்துச் சொற்றிரட்டுச் செய்து நேம்பிக் கொழித்த காலை இவ்வாறு
பின்னொட்டால் சொற்கள் பறவைவால் சுக்கானாதல்போல் செலுத்தப்படுவது
கண்டு தொகுத்து வகுத்து எட்டாக்கிய மாண்பு வியத்தற்குரியது.  இவ்வாறு
வேற்றுமைப்படுத்தும் பண்பல்லாத பிற தமிழ்ச்சொற்களை வேற்றுமை
அல்வழி எனப் பிரித்தமைத்ததைப் புணர்ச்சியுட் கூறுவம்.

 

    சா: மாலவன் - கொடுத்தான்.    
  என்னும் தொடர் மாலவனைக் கொடுப்போன் ஆகவும்
    மாலவன் - (ஐ) -க் கொடுத்தான்
  என்பது மாலவனைச் சிலையாகவோ, குழந்தையாகவோ ஆக்கியும்
    மாலவன் - (ஆல்) - கொடுத்தான்
  என்பது மாலவனைப் பெற்றுத் தருவோனாகவும்
    மாலவன் - (கு) -க் கொடுத்தான்
  என்பது மாலவனைப் பெறுவோனாகவும்
    மாலவன் - (இன்) - கொடுத்தான்
  என்பது மாலவனை அயலோன் ஒருவனைவிடக் குறையக் கொடுத்தவனாகவும்
    மாலவன் - (கண்) - கொடுத்தான்
  என்பது மாலவனை வைப்பிடமாகவும் பெயர்வினை அவையேயாக இடையுருபுஏறி மாற்றுதல் காண்க.

67. நூ: பெயரோடு ஐ ஆன் கு இன் அதுகண்
       விளியெனும் அவையே வேற்றுமை வகையே.

பொருள் வெளிப்படை 

    எண்வகைக் கொன்றாய் உருபு கூறியது சிறப்புப் பற்றியும் மனத்துப்
பதித்தல் பற்றியுமே.

    பெயரே என்னாது பெயரொடு என்றது ஆன் என்பது மூன்றாம்
வேற்றுமையை முற்றும் காட்டாமையின் ஒரு சார் ஒடு உருபும் வருமென்று
உணர்த்தற் பொருட்டு.