வினைச்சொல்
83. நூ: வினையே
பொருளொன்றினது புடைபெயர்ச்சியினை
முற்றாய் எச்சமாய்க் காலத்தோடு
தெற்றெனக் காட்டும் செயலினது என்பர்.
பொ:
வினையாவது ஒரு பொருளின் சிற்றசைவுமாய புடை
பெயர்ச்சியை முற்றுவினையாகவோ, பெயரெச்ச வினையெச்ச
வினைகளாகவோ காலத்தோடு நின்று தெளிவுறக் காட்டும் செயல் நிகழ்ச்சி
என்பர் முன்னோர்.
சா:
அவன் கொடுத்தான், கொடுத்து வைத்தான், கொடுத்த அவன்.
எச்சத்திலும் காட்டலானும் பெயர்க்கன்றித் தனக்கே
உரிமையுடைமையானும் ‘காலத்தோடு’ எனவினை
சிறப்பிக்கப்பட்டது.
84. நூ: முற்றெனப் படுவது ஒருவினை தன்பொருள்
முற்றி ஐந்தொகை கொண்டு முடிவதே.
பொ:
முற்று என்று கூறத்தக்கது ஒரு வினை நிகழ்ச்சி தன் பொருளில்
முற்றுப்பெற்று ஐந்தொகையாய திணை,
பால், எண், இடம், காலம் கொண்டு
முடிவதாம்.
சா:
நின்றாள்; உயர்திணைப் பெண்பால் ஒருமைப் படர்க்கை
இறந்தகாலம் காட்டிற்று.
85. நூ: னகர இறுதி ஆண்பாற் சொல்லே.
பொ:
ஆண்பாற் சொற்கள் ‘ன்’ இறுதியை உடையன.
சா:
கண்டனன், கண்டான்.
இதனை அன், ஆன் எனக்கூறும் முறை உறுப்பியலுக்கு ஒத்தலின்
ஆங்கும் இறுதிபற்றியே பாற்சொற்கள்
நிகழும் எனும் தொல்காப்பியமுறை
நேரிதாம் என்பது மொழியியல் ஆதலின் அம்முறையில் இங்குக்
கூறப்பெறும். பெருமாள் (பெரும் - ஆள்) என்னும் ஆட்பொருட்
பற்றியதும், தோன்றல், ஏந்தல்
என்னும் தொழிலாகு பெயர்களும் இறுதிவேறு
படலும் பிறநோக்கி அமைத்துக்கொள்க.
86. நூ: ளகர இறுதி பெண்பாற் சொல்லே.
சா:
நாணினள், நாணினாள்.
|