பக்கம் எண் :
 
பெ

    பொ: முற்றுவினைபோல ஐந்தொகை காட்டாது வினை முதனிலையோடு
காலம் காட்டிப் பிற நான்கையும் உணர்த்த மற்றொரு பெயரைப் பொருந்தி
நிற்பது பெயரெச்சமாகும்.

    சா: கொடுத்த கை; வந்த பையன்.

110. நூ: பெயரெச்சவினையே காலப் பிரிவால்
       செய்தசெய் கின்ற செய்யுமென் மூன்றே.

    பொ: பெயரெச்சவினை முக்காலப் பிரிவினால் முறையே செய்த
செய்கின்ற, செய்யும் என மூன்றாம்.  செய்கின்ற என்பது செய்கிற
என்பதையும் உட்படுத்தும்; செய்ய - செயபோல.

    சா: நெய்த ஆடை, எய்கி(ன்)ற கணை, கொய்யும்பூ.

தொகை

111. நூ: பெயரும் வினையும் பொருட்கூட்டாக
       இடையில்இடைச்சொற் பொருள்படச் சிலசொல்
       ஒருசொல்போல இயல்வது தொகைச்சொல்.

    பொ: பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் கருத்தூட்டத்திற்காகத்
தமக்கிடையில் பொருளியை புறுத்தும் இடைச்சொற் பொருள் தோன்ற
இரண்டு முதலாம் சொற்கள் கலந்து ஒரு சொல் போல நிகழ்வது தொகைச்
சொல்லாம்.

    விரி: பெரிதும் இரு சொல்லே தொகைச் சொல்லா மேனும் கலங்கரை
விளக்கம் (கலத்துக்குக் கரையை விளக்கிக் காட்டுவது), நுண்மாண்
நுழைபுலம் என இரண்டல் மேலும் அமைதலின் சில சொல் எனப்பட்டது.

112. நூ: தொக்குநிற்பது தொகையெனும் வழக்கினும்
       தொகுவது தொகையெனக் கொள்ளல் நன்றே!

    பொ: இரண்டு சொல்லிடை உருபுகள் தொக்கு நிற்பதே (மறைந்து)
தொகை என்னும் கொள்கையினும் இரண்டு முதலாம் சொற்கள்
தொகைப்படுவதுவே தொகை என்னும் கொள்கை நன்று.

    விரி: இளம் பூரணரின் முன்னைய கொள்கை வழி இயன்ற நன்னூல்
பெரு வழக்குற்றமையின் பரவிய கொள்கையினும் சேனாவரையர் நிறுவிய
பின்னைக் கொள்கை இன்று பரவல் நன்றாம் என்றவாறு

113. நூ: வேற்றுமை உம்மைஉவமை பண்பு
       வினை அன் மொழியென் றாறே தொகைச்சொல்.

    நூ: தொகைச் சொற்கள் ஆறென்பது.