பக்கம் எண் :
 
பெ

    பொ: ஒரு தொகைச் சொல்லின் பொருள் விரிக்கப் புகின், அது பல தொகைச் சொல்லின் உருவந்தோன்ற நிற்கும்.  அத்தொகைச் சொல்லின் பொருளைக் கருத்தாற்றல் நோக்கி உணர்க.

    சா: அலைகடல்-வினைத்தொகை; இரண்டாம் வேற்றுமைத் தொகை.

    சொற்பொருள்-சொல்லினது பொருள், சொல்லால் அறியும் பொருள்; சொல்லுக்குப் பொருள்; சொல்லின் கண் பொருள், சொல்லானது பொருள் சொல் என்னும் பொருள், சொல்லும் பொருளும் என ஏழு வகையில் வேறுபட்டமை காண்க.

இடைச்சொல்

125. நூ: மொழிமனை யகத்துத் தொடரெனும் சுவரைப்
        பெயர்வினை என்னும் பொருட் சொற்கற்களால்
        எழுப்பத் தக்க இடைச்சாந்தாகத்
        தனித்துப் பொருளொன் றின்றியும் பெயர்வினைப்
        பின்முன் வந்து பொருள் தரல் இடைச்சொல்

    பொ: மொழியாகிய பெருமனையிற் தொடர் என்னும் பக்கச்
சுவர்களைப் பெயர்ச்சொற்கள் வினைச்சொற்கள் என்னும் பொருளுடைய
சொல்லாம் கற்களால் எழுப்பும்போது, இடைப்பூசி இறுகச் செய்யத் தகுந்த
சாந்தாக, தனிநோக்கின் பொருளின்றியும், பெயர்க்கும், வினைக்கும் பின்னும்
முன்னும் வந்து பொருள் தருவது இடைச்சொல்லாம்.

    தொடரைச் சுவரென்றமையின் தொடர்பட்டமையும் உரையும், பாட்டும
கூடங்களாதலும் அணி, யாப்பு முதலன மேல்நிலை மாடங்களாதலும் கருதுக.

    தம்பி (கு) கொடுத்தான் என்புழி, கு இடைப்புகின் நேரும் தொடர்
மாற்றம் தனி நிற்குங்கால் அதற்கின்மை அறிக.

126. நூ: வினாச்சுட் டெழுத்துக்கள் வேற்றுமை உருபுகள்
        முதனிலை ஒழிந்த சொல்லின் உறுப்புகள்
        ஏ ஓ உம்மை மற்றே அசைபிற
        ஆய உணர்வறி குறிகள் இடைவகை.

    பொ: வினாவெழுத்து சுட்டெழுத்து, வேற்றுமை உருபுகள், சொல்லின்
ஆறுறுப்புகளில் முதனிலை தவிர்ந்தபிற, தாம் தனிப்பொருள் விளக்கும் ஏ,
ஓ, உம்மை, மற்றே, அசைநிலை, உணர்த்துவனவும் பிறவும் ஆகிய
உணர்வறிவுறுத்தும் குறியீடுகள் இடைச்சொல்லின் வகைகளாம்.