பக்கம் எண் :
 
3

3. உறுப்பியல்


143. நூ: தமிழிற் சொற்பிரிப் பொருதனிச் சுவையே
        உடற்கூற் றொழுங்கு கடைப் பிடியாகும்.

    பொ: தமிழ்மொழியில் சொற்களைப் பிரித்தறிதல் ஒரு தனிச்
சுவையுடையதாகும்.  என்னெனின் உடற்கூற்றமைப்பின் வைப்பொழுங்கு
கடைப்பிடிக்கப்பட்டுக் கிடத்தலான் ஆம்.

    தலை, உடல், வால்போல் வனவும், இடையாமை இறகு பெற்றனவும்,
கால் பெற்றனவும் ஆய் அமைந்த பல்வகைச் சொற்களை அவ்வவற்றின்
அமைப்பு நோக்கிப் பிரித்தல் சுவையுடையதென்பதாம்.

144. நூ: பகாச்சொல் பகுசொல் எனச் சொல் இருநிலை.

    பொ: சொற்கள் பகுசொல் என்றும் பகாச்சொல் என்றும் இரு
நிலையினவாகும்.

145. நூ: பகுப்பினும் பொருளற்றிருப்பது பகாச் சொல்

பொ: பகுக்க இயலாததாய் இருக்கும் அதனை ஒருவாற்றான் கூறு-

    படுத்தினாலும் சொல்லின் முற் பொருளுக்குக் காரணமாயது, எதுவெனக்
காணமுடியா திருப்பது பகாச் சொல்லாகும்.

    சா: நிலம் = நில் + அம்; மரம் = மரு + அம்.

    நீர்போலாது நிலையாயிருப்பது நிலம் என்றும், பயிரின மணம் (மரு)
உடையது மரம் என்றும் கூறும் வாய் உண்டேனும் அம்சாரியைக்கு
இப்பொருள் காட்டாற்றல் இன்மை அறிக.  அன்றிச் செம்மை = (செம் +
மை) என்பது போல் முதனிலைப் பொருளே தரும் இறுநிலை கொண்டது
எனின் சொல், நீர், விண், மண், நட, படி, செல், கொள் முதல
அத்தன்மையும் இன்மையின் விடுக.

146. நூ: பகுப்பின் உறுப்பெலாம் சிறப்பது பகுசொல்

    பொ: சொல்லைக் கூறறிந்து பகுத்தால் [அப்பகுப்பின் கண்ணே]
ஒவ்வோருறுப்பும் சொல்லின் முழுப்பொருளுக்குத் துணையாய் நிற்கும்
தன்மையின் சிறப்பது பகுசொல் ஆகும்.

    சா: கூத்தன் = கூத்து+அன்; ஆடுவாள் = ஆடு+வ்+ஆள் என்றவிடத்து
முழுப்பொருளுணர்த்தல் காண்க.