பக்கம் எண் :
 
155

155. நூ: முதனிலை தவிர்ந்த வினையின் உறுப்பினில்
        இறுநிலை திணைபால் எண் இடம் நான்கும்
        இடைநிலை காலமும் சந்தி திரிபு
        சாரியை மூன்றும் பொருளில வாயினும்
        இன்றியமை யாதும் இயலும் தகையன.

    பொ: பெயர், வினைகாட்டும் முதனிலை தவிரப் பிறவினையின்
உறுப்புகளில் இறுதிநிலை திணைபால் எண் இடம் நான்கையும், இடைநிலை
காலம் ஒன்றும், சந்தி, திரிபு, சாரியை மூன்றும் தனிப் பொருள் இலவாயினும்
இன்றியமையாதனவாயும் காட்டி இயங்கும் தன்மையுடையன.

    வினையைப் பற்றியே தொடர்ந்து கூறி வருதல் நினைக.

    விரி: கொடுத்தான்-என்னும் உயர்திணை ஆண்பால் ஒருமைப்
படர்க்கை இறந்தகால வினைச்சொல்லின் திறத்தை நோக்குக.

    கொடு + த் + த் + ஆன்.

    இப்பிரிப்பில் ஆன் என்னும் இறுதி நிலையை நீக்கி
கொடு+த்+த்+அ=கொடுத்த என்னும்போது-திணை, பால், எண், இடம்
தொலைந்தது காண்க.  மற்று, கொடு, வினைமேலிட்டுத் தோன்றிய கொடுத்த
கொடுக்கின்ற என்ற சொல்லிடத்து இடைநிலைகளாய த் - இறந்தகாலமும்,
கின்று நிகழ்காலமும் உணர்த்தலும் அறிக.

    கொடுத்தான், கொடுக்கின்றான் என்பதில் த்-உம்; க்-உம் பொருளை
உணர்த்தலில எனினும்-கொடுதான்,கொடுகின்றான் என முதுகெலும்பில்லாமல்
ஒலிப்பதைத் தடுப்பன அவையே என்க.  எனவே சந்தி, திரிபு, சாரியைகளும்
கொல்லொலிப் பூட்டத்தை ஈடு செய்தலின் இன்றியமையாதனவே யாயின.

156. நூ: தனிக்குறில் அடுத்த குடுறு முதனிலை
       இரட்டித் திடைநிலை இன்றிப் பெரும்பால்
       இறந்த காலம் காட்டும் என்க.

    பொ: தனிக்குறிலை அடுத்து குடுறு இறுதியுடன் நிற்கும் முதனிலைகள
அவற்றின் ஒற்று இரட்டித்துப் பெரும்பாலும் காலங்காட்டுவதாய் இடைநிலை
இல்லாமலே இறந்தகாலம் காட்டும் என்றறிக.

சா: புக்கான் - புக்கு (புகு) + ஆன் }  
  நக்கான் - நக்கு (நகு) + ஆன்  முதனிலை
  பெற்றாள் - பெற்று (பெறு) + ஆள் இரட்டித்து
  உற்றாள் - உற்று (உறு) + ஆள் இறந்தகாலம்
  கெட்டார் - கெட்டு (கெடு) + ஆர் காட்டின
  நட்டார் - நட்டு (நடு) + ஆர்