159. நூ: தொழிற் பெயர் இறுதி நிலைவிரி வுடையன
தல் அல் அம்ஐ கை, வை கு, பு
உள்இல் தி,சி வி,வு இ,து
காடு பாடு என்பவும் பிறவுமாம்
பொ:
கூறிய பதினெட்டும் பிறவுமாய்த் தொழிற்பெயர் இறுதி நிலைகள் விரிவுடையனவாம் என்பது.
சா:
ஓடுதல், ஓடல், நோக்கம், கொடை, வருகை, பார்வை, போக்கு, படிப்பு, கடவுள் (செய்யுள்) எழில்,
மறதி, உணர்ச்சி, கல்வி, நினைவு, வெகுளி, நன்றிமறப்பது நன்றன்று (குறள்) வந்தது, வருகிறது,
வருவது; காடு (கடுகுதல் - முதனிலை நீட்சி), சாக்காடு (சாவு), பாடு (பாடுதல் - பாடு) கோட்பாடு.
இறக்குமதி, ஏற்றுமதி - என்பவற்றை மதி இறுதித் தொழிற் பெயராய்க் கூறுதல் ஒருவகை.
வி:
‘து’ இறுதிக்குக் காட்டிய மூன்றும் முக்காலம் பற்றியது;
வினையாலணையும் பெயர்போலக் காலங்கொண்டியல்வது.
இதனை
துவ்விறுதி அஃறினை ஒருமையினின்று நுணுக்கமாய்ப் பிரித்தாளல்
வேண்டும்.
அங்கு வருவது (வருதல்) பையன்
அவ்வழி, மாடு வருவது
இப்பட்டியல் தொழிற்பெயரை நன்கறியப்பயனாம். சில தொழிற்பெயர்
இறுதிகெட முதனிலை மட்டில்
முதலெழுத்து நீண்டு தனிப் பெயராய்
முடியும்:
கதுவுதல் - காது; கெடுதல் - கேடு; உண்ணுதல் - ஊண்; உலவுதல் -
உலா. இது பின்னெழுத்து நீட்சி.
உலாவுதல் என்பது நீட்சியடித்
தோன்றியது. (கடவுதல் - கடாவுதல்; நடத்தல் - நடாத்தல்)
சில தொழிற்பெயர் நீளாது முதனிலை மட்டே தொழிற்பெயராதல்
உண்டு. வழக்கு: முறுக்கு, சுருட்டு;
செய்யுள்: கெடுவாக, அறிகொன்று
(குறள்), கோடல், கோறல், சேறல், நீடல், வேறல் (இருவர் வேறல்-புறம்)
என
முதல் நீண்டு ல, ள, தம்முள் புணர்வுத் திரிபுறுதல் ஒருவகை.
160. நூ: இடைநிலைக்குரிய காலந் தன்னை
முதனிலை சிலபால் இரட்டி நின்று
முடித்தாங்கு இயல்பாய் இறுதியும் நிகழ்த்தும்
|