166. நூ: செய்துவாய் பாட்டில் அடக்கும் இகர
இறுதி உவ்விறு முதனிலை ஊருமே.
பொ:
செய்து என்னும் வாய்பாட்டினே அடக்கிக்கொள்ளக் கூறும் இகர
இறுதி வினையெச்சம், உகர இறுதி முதனிலைமேல்
இகரம் ஊர்வதானால்
ஆவதாம்.
சா:
வணங்கினான், ஓடினான், உதவினான். சிவணி(பொருந்தி) அணரி
(அணர்ந்து) என்று மெய்யிறுதிமேல்
ஏறிவரும் சொற்கள் வழக்கற்றன.
வாய்பாடு கூறிய எச்சங்களைப் பழமை மீறிப் பிரித்தது தெளிவிற்கே.
இடைநிலை
167. நூ: இறுநிலை அடுத்தே அணுகத் தக்கது
இடைநிலை; காலத்தாலது மூன்றே.
பொ:
ஒருசொல்லைப் பிரிக்குங்கால் முதனிலை இறுதிநிலை அறிந்து
கூறுணர்ந்தபின் பிரிக்கத்தக்கது
இடைநிலையே அது காலங் காட்டலால்
மூன்றாய் வரும்.
168. நூ: த்,ட்,ற் இன்,ன்,இ இறப்புக் கிடைநிலை;
கிறு,கின்று நிகழ்வு; ப் வ் எதிர்வே.
பொ:
த், ட், ற், இன், இன் முன்பின் குறைந்த ன், இ, இறந்த காலம்
காட்டும்; நிகழ்காலத்திற்குக்
கிறு, கின்று; எதிர்காலத்திற்கு ப், வ்.
சா:
முடித்தான், கண்டான், நின்றான், வாங்கினான், ஆனான், ஓங்கியது
வருகிறான்; தருகின்றான்.
காண்பார்; செல்வாய்.
வி:
ஆ நின்று என்று நிகழ்காலத்துக் கூறிய பிறிதோர் இடைநிலை
உண்மையில் ‘செய்யா’ என்னும்
வாய்பாட்டு வினையெச்சமாய் ‘ஆவிருந்து’
என்றெலாம் பிரிக்க நின்றமையின் விடுத்தாம். ஆனான்,
போனான்
ஒன்றிரண்டே ‘ன்’ இடைநிலைச் சான்றுகள்: ஓங்கினது இடைநிலைக்
குறையின்றேனும் தாழ்வழக்காய்க்
கருதப்பெறுகிறது.
169. நூ: இன்னே உவ்விறு முதனிலைக் கிடைநிலை.
பொ:
‘இன்’ என்னும் இறந்தகால இடைநிலை, உகர இறுதியாய் வரும்
முதனிலைக்கு உரியதாய் ஒட்டும்.
சா:
வாங்கினான், பாடினான் பிறவும் இவ்வாறே காண்க.
போகி(யி)னான், சொல்லினான் என மாறி
வருதல் மிகச் சில. அவையும்
போகு, சொல்லு எனுன்ம் முதனிலை எனவுமாம்.
|