பக்கம் எண் :
 

    சா: கொண்டனன், சென்றனள், விட்டனர், தின்றன, நடந்தனென்,
பயின்றனன்,  உண்டனம், நகைத்தனெம், வந்தனை, நின்றனிர்.

    உண்பன், உண்பான், உண்பர், உண்ப, உண்பென், உண்பம், உண்பெம்,
உண்பீர் எனஎதிர்வில்வாராமை காண்க.

178. நூ: நெடில்இறு நிலைபெறும் பாற்சா ரியைஇல.

    பொ: உயிர்நெடிலெழுத்தை முதலாகவுடைய இறுதிநிலைகள்
பெரும்பாலும் சாரியை இலவாய்ப் புணர்ந்து நிற்கும்.

    சா: அழுதான், தொழுதான், வணங்கினார், பெற்றேன், உற்றேம்,
மகிழ்ந்தோம், அடைந்தோம், தாராய், (உண்ணீர் உண்ணீர் என்றே
ஊட்டாதார்).  முன்னிலை உம் எப்போதும் (கேளும்) சாரியை
பெறாமையையும், பலவின் அகரம் சிலவிடத்து ‘நல்லநல்ல அவை நல்ல’
(தேவாரம்), நல்ல போலவும், நயவ போலவும் (புறம் 58) உள்ள, உள, இல்ல,
இல-எனச் சாரியை பெறாமையையும் ஈண்டு அடக்கிக் கொள்க.

179. நூ: அஃறிணை து,வைமுன் அவ்வே சாரியை.

    பொ: அஃறிணை ஒருமைக்குரிய ‘து’ வ் விறு நிலைக்கும் அஃறிணைப்
பன்மை வினையாலணையும் பெயர்க்குரிய ‘வை’ இறுதி நிலைக்கும்முன்
‘அ’கரம் சாரியையாம்.

    சா: விழுந்தது; விழுந்தவை.

    வட + அ + து - வடாது; தும் முன் அப்பெறும் உறுதியால் வடத்து
என ஆகாமை காண்க (புறம்)

    நட + ந் + த் + அ + து; விழு + ந் + த் + அ + வை.

    அது, அவை என்றே பிரிப்பின் சுட்டுப் பெயராய் அப்பொருள்
காட்டாமையின் இவ்வாறு பிரிக்க என்றவாறும் ஆம்.

180. நூ: இன் இடை நிலைமுன் துப்புணர் திரிபுறு

    பொ: இடைநிலையாகிய இன் முன்னர் இறந்தகால ‘து’ இறு நிலைவந்து
தானும் திரிந்து னகரத்தையும் திரித்து அமையும் வடிவமே ‘று’ என்பது.

    நு: இந்நூற்பா ‘று’வ்வின் உண்மை கூறிற்று.

    சா: கூவிற்று, ஓடிற்று முதலியன.

    கூவு + இன் + து (று) என்றே பிரித்தல் வேண்டும்.  இப்பிரிப்பு தகர
இடைநிலை உண்மையை விளக்குதல் காண்க.  ஈண்டிவ்வுண்மையறியாவிடின்
தெளிவுறப் பிரிக்க இயலாது.