4. புணரியல்
பொது
185. நூ: எழுத்தாலாகித் தொடர்ப்படும் சொல்லின்
இறுதியும் முதலும் மெய்யுயிர் இரண்டே.
பொ: எழுத்துகளால்
பொருள்பட அமைந்து தொடர்ந்து நின்று
கருத்தைத் தெரிவிக்குமாறு தொடராகும் சொல்லினது இறுதியும்
முதலும்
மெய்யும் உயிரும் என்று இரண்டே ஆகும்.
தமிழின் அடிப்படை எழுத்தே இரண்டாதலின் அற்றாம்.
சா:
போர் - மெய்ம்முதல்; மெய்யிறுதி.
படை - மெய்ம்முதல்; உயிரிறுதி.
அவை - உயிர்முதல்; உயிரிறுதி.
இடர் - உயிர்முதல்; மெய்யிறுதி.
மெய்ம்முதலும் உயிரிறுதியும் உயிர்மெய் வடிவத்தே இருக்கும்.
உயிர்மெய்யெழுத்து ஓரெழுத்தன்மையின்
பிரித்தறிதல் வேண்டும்.
186. நூ: முன்னிற் பதுவாம் நிலைச்சொல், அடுத்துப்
பின்வந் தியையும் வருசொல் முறைமையில்
முன்னதன் இறுதி எழுத்து, வருவதன்
முன்னெழுத் திரண்டே முடியப் புணரும்
பொ:
சொற்சேர்க்கையில் முன்னே நிற்பது நிலைச்சொல்லாம்.
பின்வந்து அடுத்து இயையும் சொல்
வருசொல்லாம். இம்முறைமையில்
அடுத்தடுத்து வருஞ் சொற்கள் முன்னிற்கும் சொல்லோடு புணரும்
போது
நிலைச்சொல்லின் இறுதி எழுத்தும், வருசொல்லின் முதலெழுத்தும் ஆகிய
இரண்டுமே புணர்ச்சித்திறத்திற்குரியன
என்பது.
இவ்வாறு தொடரி (சங்கிலி)ப் பிணைப்பு போல் அமைவதே புணர்ச்சி
என்பதாம்.
வி:
முன்னை நூல்களில் நிலைமொழி வருமொழி என்று
குறிக்கப்பட்டன. மொழி என்பது முன்னூல் எங்கும்
சொல் என்னும்
பொருளிலே கையாளப்பட்டுள்ளது. (மொழிபெயர் தே எத்து-சொல்பெயர்
தேஎத்து-அகம்)
ஆயின் இக்கால் மொழியின் பொருள்விரிந்து போயமையின்
சொல் என்றே கூறினாம். சொல் முதல்
எழுத்து என்பனவும் இற்று.
|