21. நூ: நுனிநா எழுந்துயர் அண்ணம் ஒற்ற
னகரம் ஒலிக்கும்; மும்மையைத் தெளிவாய்
உணர முறையே டதற சார்த்தலே.
பொ:
நுனி நாக்கு எழுந்து மேற்புற அண்ணத்தை ஒற்றின் னகரம்
ஒலிக்கும். இம்மூன்று - ண, ந, ன
க்களின் ஒலித்தன்மையைத் தெளிவாய்
உணர முறையே ட, த, ற இவற்றைச் சார்த்தி ஒலித்தறிக.
சார்த்தி ஒலித்தலாவது - இ, யி; உ - வு உயிரினின்று உயிர்மெய் -
வேறுபாடறிய யகரம் ஒட்டி
இகரத்தையும், வகரம் ஒட்டி உகரத்தையும்
ஒலித்தல் போல் ஒலிப்பது. க - ங: ச - ஞ சார்த்தி
ஒலித்தலும்
இத்தன்மையன.
22. நூ: எழுத்தினைத் தனித்துக் குறித்திடல் வேண்டின்
மெய்ம்மேல் ‘அ’வ்வும் அத்தொடு கரமும்
உயிர்மெய் உயிர்க்குறில் இரண்டும் கரமும்
நெடில்கள் காரமும் எழுத்துச் சாரியை.
பொ: எழுத்துகளைத் தனித்துக்
குறிக்குங்கால் மெய்யை ‘அ’ என்னும்
இயக்கி சிவணியும், அதன்மேல் கரத்தைச் சிலநூல் வழக்குக்
கொத்தும்,
உயிர்க்குறில், உயிர்மெய்க் குறில்களை ‘கரம்’ - சேர்த்தும், உயிர் நெடில்,
உயிர்மெய்
நெடில்களைக் காரம் சேர்த்தும் ஒலித்தல் எழுத்துகளைச் சுட்டும்
எழுத்துச் சாரியையாம்.
வி:
‘கசட தபற வல்லினம்’ என்றக்கால் அவைபுள்ளிகொண்ட
மெய்யெழுத்துகளாகவே கருதப்படும். தொல்காப்பியப்
பிறப்பியல் முற்றும்
பிறவிடத்தும் மெய்யெழுத்துகட்கு ‘அ’வ்வும், கரமும், காரமும் சேர்த்துக்
கூறப்பட்டிருக்கும் இயல்பறிக. ஈண்டு இரட்டிப்பாய்க் கரம் சேர்க்குமாறு
கூறப்பட்டதே அன்றி
குறிலுக்கும் மெய்க்கும் குழப்பம் உண்டாதலின் கரம்
சேர்க்காது ‘அ’வ்வொடு மட்டில் கூறல் தக்கது.
க - (ககரம்) - மெய்
அகரம், ககரம் - குறில்
ஆகாரம், காகாரம் - நெடில்
உயிர்மெய் ஓரெழுத் தன்மையின் குறிலைக் ககர அகரம் என்று கூறும்
பழமை மூக்கைத் தலைசுற்றி வந்து
தொடுவதே.
23. நூ: முன்னர் அகரம்வைத்(து) ஆய்தம் தன்னைப்
பின்னர் ஆனம் ஏனம் சேர்க்க
நண்ணும் கவ்வொடு நன்கொலி செயலே.
|