பக்கம் எண் :
 
எண

எண்பெயர்

233. நூ: எண்ணுப் பெயர்முன் எண்பெயர்வரினும்
        மற்றைப் பொதுப்பெயர் வந்து புணரினும்
        ஏழும் ஆறும் முதல் குறுகும்மே.

    பொ : எண் பெயர்கள் முன்னர் பிற எண் பெயர்கள் வந்தாலும்,
மற்றைய பொதுப்பெயர்கள் வந்து சேர்ந்தாலும்-ஏழும் ஆறும் முதல் குறுகும்.

    சா: அறுபது; எழுமூன்று; அறுசுவை; எழுபிறப்பு.  ஆறிரண்டு, ஏழாறு
என உயிர்முதல் எண்வரின் இயல்பாதலும், ஆறுமாடு, ஏழுவீடு எனப்
பொதுப்பெயருள் மெய்ம்முதல் வரின் இயல்பாதலும் அதன் இயல்பு
வடிவங்கள் ஆதலின் திரிபுப்புணர்ச்சியில் கூறலாம்.  முதலிரண்டடி வரும்
நூற்பாக்கட்கும் பொதுவாம். எண்வரிசைப்படிச் செல்லாமல் எண்
பெயர் அமைப்புத் திரிபொட்டி நூற்பாக்கள் செல்லும்.

234. நூ: ஒன்றும் இரண்டும் ஒரு இரு எனவாம்
        மெய்ம்முதற் சொல்வரின்; உயிர்முதல்வரினே
        ஓர் ஈர் என்றாம்: உறுதிரி பறிதல்

    பொ: ஒன்றும் இரண்டும் மெய்முதற் சொல்வரின் ஒரு
இருஎனத்திரியும்; உயிர் முதற்சொல்வரின் ஓர் ஈர் எனத்திரியும்; இவற்றைக்
கரு பெரு திரிபொடு பொருத்தி அறிக.

    சா: ஒரு மாந்தன், ஓருலகம்; இருகண்கள், ஈரொட்டு.  இவற்றை A, An
என்னும் ஆங்கில ஒருமை அமைப்போடு ஒப்பிட்டு நோக்குக.

235. நூ: மூன்றும் ஐந்தும் முதலெழுத் தொன்றே
        ஊன்றி உயிர்உடன்படுமெய் பெற்றும்
        மூவே முவ்வாய்க் குன்ற வருமெய்
        தாமிரட் டித்தும் ஐவலி வரினதன்
        மெல்லினம் பெற்றும் மேவும் என்பர்.

    பொ: மூன்றும், ஐந்தும் புணரின் முதலெழுத்து மட்டும் எஞ்சி நிற்கப்
பிறவெழுத்தெல்லாம் கெட்டு - உயிர் முதல்வரின் உடன்படுமெய்யாக
முறைப்படி வவ்வும், யவ்வும் பெற்றும், மெய்வரின் ‘மூ’ முவ்வாய்க் குறுகி,
வருகின்ற மெய்யெழுத்துகள் இரட்டித்தும், ‘ஐ’ வலிவரின் அதன் இனமான
மெலி மெய்பெற்றும் நிகழும் என்பர்.