பக்கம் எண் :
 
239

239. நூ: ஒன்பதொழிந்த மற்றைத் தொண்டெண்
        தம்மொடு தாமே பின்னிட வேண்டின்
        எண்முதல் எழுத்தின் குறிலோடு எண்முதல்
        உயிரெனின் வகரமும் மெய்யெனின் அவையும்
        இணைந்து வந்து பிணைந்து நிற்கும்.

    பொ: ஒன்பது என்னும் எண்ணைத் தவிர பிறதொண்டு எண்களும்,
தம்முன் தாம் புணர்ந்து நிற்க வேண்டுமாயின் எண்களின் முதல் எழுத்து
குறிலேல் அவை மட்டும் நிற்க, நெடிலேல் குறிலாகி நிற்க, எண்முதல்
எழுத்து உயிரெழுத்தாயின் உடம்படு மெய்யாக வகரம் பெற்றும்,
மெய்ம்முதலாயின் அவை மிகுந்தும் வந்து இணைந்து புணர்ந்து நிற்கும்.

    ஒவ்வொன்று; இவ்விரண்டு (ஈரிரண்டு) மும்மூன்று; நந்நான்கு
அவ்வைந்து (ஐயைந்து) அவ்வாறு, எவ்வேழு எவ்வெட்டு, பப்பத்து. 
தொண்டெண் என்று நூற்பாச் சொல்லாகப்பயன்படுத்தியது இச்சொல்லே
வழக்குறல் வேண்டும் என்னும் அவாவான்; வழக்குறு மேல் தொத்தொண்டு
நன்றாம்.

240. நூ: எண்ணடை புணர்ந்தால் பத்திடை கெடுமே.
        முன்னடை யாங்கால் அதனோடு இன்கொளும்

    பொ: பிற எண் வந்து தனக்கு அடையாய் முன்நிற்பின் பத்து
இடைக்குறையுறும்; தான்பிறவெண்கட்கு முன்னடையாகும் போது
இடையெழுத்துக் கெடுதலோடு இன்சாரியை கொள்ளும்.

    சா: இருபது, முப்பது, நாற்பது, ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது,
தொண்பது, பதினொன்று, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து பதினாறு,
பதினேழு, பதினெட்டு.

    பத்தொன்பது - தனி வழக்கு.

    Teenage என்னும் அயல்வழக்குக்குப் பதினகவை என்பது ஈடு.

241. நூ: பன்னிரண்டென்னும் எண்ணுரு நோக்கின்
       பான்எனும் சொல்லின் பழமை தெரியும்.

    பொ: பன்னிரண்டு என்னும் எண்வடிவத்தை நோக்கினால் பான்
என்பது பத்திற்குரிய மற்றொரு சொல்லாய்ப் பழமையில் இருந்தது தெரியும்.

    பான் + இரண்டு=பன்னிரண்டு.  தொண்பான் (ஒன்பான்) சுவை. 
தொல்காப்பியமும் மருளுறக்கூறலின் (435) அதன் முந்து குமரிக்கண்டத்
தமிழழிவுச் சொல் இஃது எனலாம்.