5. பொதுவியல்
வழக்கு
259. நூ: ‘இலக்கணச் செம்மை இலக்கணப் போலி
மருவென் றாகும் மூவகை இயல்பும்
அவையல் கிளவி மங்கலம் குழுக்குறி
எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்’
பொ :
இலக்கணச் செம்மையுடையனவும், இலக்கணப்போலி
ஆவனவும், மருவுவனவும் என்று மூவகைப்பட்ட இயல்பு
வழக்கும்,
அவையிற்கூறத் தகாத இடக்குச் சொற்கள், மங்கலச்சொற்கள், குழுக்குறிச்
சொற்கள் என்னும் மூன்று தகுதி வழக்கோடு சேர்ந்து மக்கள் வழக்குச்
சொற்கள் ஆறுவகையாம்.
சா:
முற்கூறியவையும், பொதுவிற்கூறப் புகுவனவும் வழுவாது வருதல்
இலக்கணச் செம்மை. ‘யாம் வந்திலோம்’
என்னும் பண்டை வழக்கு இக்கால்
நாங்கள் வரவில்லை என்று வழுவின்றி வருதலும் கொள்கை. யாய்-என்தாய்,
ஞாய்-நின்தாய்; எந்தை, நுந்தை முறையே என்தந்தை, உன்தந்தை என்பதும்
செம்மையே.
இலக்கணப்போலி:
காவுங்கள் என்பதனைச் செம்மை வழக்காய்
எண்ணிக் காருங்கள் (கோவை-கோர்வை) என்பதும், மோத்தல்
என்பதை
அஃறிணை வழக்காய்க் கருதி முகர்தல் என்பதும் போலியே. கடைக்கண்,
அடிதடி என
முன்பின் வருதலும் இ-எ, உ-ஒ ஒலித்திரிபும் போலியாம். (புறம்) என்பது அமைதலும் போலியாம்.
மரு:
அம்மான்சேய், அத்தையன்பர், கைம்பெண்டாட்டி என்பன
அம்மாஞ்சி, அத்திம்பேர், கம்(ம)னாட்டி
என்று திரிதலும், சுமையடை-
சும்மாடு ஆதலும் மருவே. வேண்டும்-வேணும்; கொண்டு-கிட்டு, கினு இவை
வழுவே.
அவையல் கிளவி:
அவையிலாடத் தகாத சொற்கள்: தெருக்
குழாயடிப்பூசலிலும், சேரிப்புற ஏசலிலும் இடம்பெறும்
பாலுறுப்பு
இழிமொழிகள் மட்டன்றி அருவருப்புக்குரியவற்றையும் மறைத்துக் கூறுதல்.
இதனை இடக்கரடக்கல்
என்று அமையாச் சொல்லாலும் கூறுவர்.
ஒன்றுக்குப் போதல், இரண்டுக்குப் போதல் (குளத்துக்குப்
போதல்,
கொல்லைக்குப் போதல், வெளியே போதல்) கால் கழுவுதல், வாயால்
எடுத்தல் என்பதியல்பாயினும்
வயிற்றால் போதல் எனல்-பவ்வீ, பகரவீ எனல்
அவையல்லன.
மங்கலம்:
நிரப்பு: நிரம்ப வேண்டுவது (நன்மைமிக வேண்டிய நிலை).
நல்கூர்வு (நல்குரவு) என்பன வறுமையை மங்கலப்படுத்துதல்.
|