பக்கம் எண் :
 
267

267. நூ: ‘ஒரு சொல் ஒழிதன் இனங் கொளற் குரித்தே.’

    பொ: கூட்டுப் பொருளில் ஒரு சொல்லைக் குறிப்பின் அது
கூறாதுவிடுத்த தன் இனப் பொருளையும் கொளற்கு உரியது.

    சா: வெற்றிலை போட்டேன் என்பது பாக்கு, சுண்ணம், புகையிலை
முதலவற்றையும்; சோறுண்டேன் என்பது குழம்பு, சாறு, மோர், காய்கறி
போன்றவற்றையும்; புரவலன் புலவர்க்கு யானை ஈந்தான் என்புழிப் பாகன்,
தண்ணடை ஆகியவற்றையும்; தேநீர் விருந்து என்பது முற்படு இனிப்பு,
காரம், இன்னவற்றையும் குறித்தல் காண்க.

முடிபு - இடைப்பிறவரல்

268. நூ: அல்வழி வேற்றுமை வழிவரு சொற்கள்
        கொள்வழி உடையதம் முடிபொடு கூடும்; அச்
        சொல்வழி இடைப்பிற வரலும் உண்டே.

    நு: இடைப்பிறவரல் உணர்த்துமுகத்தான் சொற்கட்கு முடிபும் கூறுதல்
நுதலிற்று.

    பொ: அல்வழியிலும் வேற்றுமை வழியிலும் வருஞ்சொற்கள் கொள்ளத்
தகவுடைய தம்முடிபொடு முடியும்; அச்சொற்கள் வழியே இடையில் பிற
வருதலும் உண்டாம்.

    வி: வேற்றுமை உருபுகள் முன்கூறியாங்குப் பொருளுடைய முடிபுகளைப்
பொருந்தலும், எழுவாய் பயனிலை கொளலும், விளி கூப்பாடடைதலும்,
எச்சம் முற்றலும் தம் பொருளுடைய இடைச் சொற்கள் அவ்வப்பொருள்
புல்லுதலும், தொகைச் சொற்கள் தம் பிணைப்பும் கொள் வழியுடையன.

        இடைச் சொல் பொருள் புல்லுதலானது-
        இரவும் பகலும் சேர்ந்தது ஒருநாள்

    என அடுத்ததைத் தொடர்வதோடு, ‘இருந்தாலும் இருப்பான்’ என்று
உம்மை கூறாது விடுத்த, இல்லாமலும் இருப்பான் என எதிர்மறைப்
பொருளைத் தழுவுதலும் கொள்க.

    சா: மருந்துக்கு வேப்ப மரப்பட்டை செதுக்கிக்கொண்டு வந்தான்.
கடவுளைப் பயன் வேண்டி இறைஞ்சுகின்றனர். எழிலா!  விரைந்துவா. 
புனைவு பண்பழிக்கும்.

    அம்பிகாபதி மனமாரக் காதலித்தான்.  இவைபோல் பயனிலை
சிறப்பிக்கப்படும் இடைப்பிறவரலன்றியும், நல்ல பையன் தந்தான் என
எழுவாய் சிறப்பிப்பனவற்றையும் கொள்க.  இருவழிகளின் முடிபும்
சேர்த்துக்கூறியமையின் (உரி) அடுக்கு இடைப்பிற வரலின்மை உணர்க.