பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்126முத்துவீரியம்

பொது மொழி

466. இருமையும் பயப்பது பொதுவென மொழிப.

(இ-ள்.) ஒருபொருளையும், பலபொருளையும் தருவது பொது மொழியாகும்.

(வ-று.) நங்கை, தங்கை.

(வி-ரை.)

‘ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி
பலபொருளன பொது இருமையும் ஏற்பன’ (பெயரி - 2)

என்ற நன்னூலின் கருத்தே 463 முதல் இந்நூற்பா வரை கூறப்பட்டுள்ளது. (9)

இருதிணை

467. மக்க டேவர் நரக ருயர்திணை
     மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை.1

(இ-ள்.) மக்களும் தேவரும் நரகரும் உயர்திணையாம், இவரல்லாத பிறவெல்லாம்
அஃறிணையாம்.

(வ-று.) ஆடூஉ, மகடூஉ, தேவன், நரகன், மரம், மிருகம், பறவை, நிலம், நீர்.

(வி-ரை.) தொல்காப்பியர் நரகரை உயர்திணையாகக் குறித்திலர். இளம்பூரணரும்
நச்சினார்க்கினியரும் நரகரை உயர்திணையில் அடக்கினர். நன்னூலாரும் இவர்களைத்
தழுவியுரைப்பர். இவ்வாசிரியரும் அதனை யேற்றனர். எனினும் நரகரை உயர்திணையில்
அடக்குதல் தவறென்பர் தெய்வச்சிலையார். அவர் கருத்து வருமாறு:

தேவரும் மக்களும் விலங்குமாகிய கதிப் பொருண்மை கூறி நரக கதிப் பொருண்மை
கூறாததென்னை யெனின், அக்கதிமேனிகழ்வதோர் வழக்கின்மையிற் கூறாராயினர். நரகன்
வந்தான், நரகி வந்தாள், நரகர் வந்தார் என வழங்குபவாலெனின், அக்கதியுட் டோன்றுவர்
ஆணும் பெண்ணுமாகிப் போகம் நுகர்வரென்னும் இலக்கண மின்மையான், மக்களிற் றூய்மை
யில்லாதாரை யுலகத்தார் வழங்குமாறவை யென்க. நாகர் துயருழப்பர் என அக்கதிமேற்
றோற்றுவார் மேலும் வருமாலெனின், அவ்வாறு வருவன பால் கூறப்படுதலின்றி ஆணும்
பெண்ணும் வரையறுக்கப்படாத பொருளை உயிர்த்தன்மையைக் குறித்து உயர்திணைப்
பன்மையான் வழங்கினாரென்க. (தொல் - சொல் - தெய்வ - 4) (10)

1. நன் - சொல் - பெயரி - 4.