பக்கம் எண் :
 
சொல்லதிகாரம்180முத்துவீரியம்

என, என்று

651. எண்ணே குறிப்பே இசையே பண்பே
     வினையே பெயரே எனவோ ராறினும்
     எனவெனு மொழிவரும் என்று மற்றே.

(இ-ள்.) எனவென்னும் இடைச் சொல்லும், என்றென்னும் இடைச்சொல்லும், எண்ணும்,
குறிப்பும், இசையும், பண்பும், வினையும், பெயருமாகிய ஆறுபொருளையுந் தரும்.

(வ-று.) நிலனென நீரெனத் தீயென, எண்; துண்ணெனத் துடித்தது, குறிப்பு; ஒல்லென
வொலித்தது, இசை; வெள்ளென விளர்த்தது, பண்பு; ‘மலைவான் கொள்கென, (புறம் - 143)
வினை; ‘அழுக்கா றெனவொருபாவி, (குறள்-168) பெயர்; என்றும் இவ்வாறே ஒட்டிக் காண்க.
(9)

மற்றையது

652. மற்றைய தென்பது சுட்டிய தற்கினம்.

(இ-ள்.) மற்றையதெனப் பெயர்க்கு முதனிலையாய் வரும் மற்றையென்னும் ஐகார
ஈற்றிடைச்சொல், சுட்டப்பட்டதனை ஒழித்து, அதனினங் குறித்து நிற்கும்.

(வ-று.) ஆடை கொணர்ந்தவழி யவ்வாடை வேண்டாதான் மற்றையது கொணாவெனும்.
அஃது அச்சுட்டிய வாடை யொழித்து அதற்கு இனமாகிய பிறவாடை குறித்தது. (10)

மற்று

653. மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை.

(இ-ள்.) மற்றென்னும் இடைச்சொல், வினைமாற்றும், அசைநிலையுமாகிய இரண்டு
பொருளையுந் தரும்.

(வ-று.) ‘மற்றறிவா நல்வினை’ (நாலடி-19) வினைமாற்று; அது மற்றவலம், (குறுந் -
12) அசைநிலை. (11)

எற்று

654. 1 எற்றென் கிளவி யிறந்த பொருட்டே.

1. தொல் - சொல்: இடை - 15.