பக்கம் எண் :
 
பொருளதிகாரம்229முத்துவீரியம்

கரந்தை

822. பகைவர் கவர்ந்ததன் பசுக்களை மீட்டல்
     கரந்தை யென்மனார் கற்றுணர்ந் தோரே.

என்பது, பகைவ ரோட்டிக் கொண்டுபோன தனது நிரையை மீட்டல் கரந்தை. (54)

வஞ்சி

823. மாற்றார் மேற்செலல் வஞ்சியா கும்மே.

என்பது, பகைவர்மேற்செலல் வஞ்சி. (55)

காஞ்சி

824. இரைந்து பகைவரோ டெதிர்ப்பது காஞ்சி.

என்பது, ஆரவாரித்துப் பகைவரோ டெதிர்த்தல் காஞ்சி. (56)

நொச்சி

825. காமரு தன்னரண் காப்பது நொச்சி.

என்பது, தனது கோட்டையைக் காத்தல் நொச்சி. (57)

உழிஞை

826. பகைஞ ரரணைப் பற்றுத லுழிஞை.

என்பது, பகைவர் கோட்டையைப் பிடித்துக்கொள்ளல் உழிஞை. (58)

தும்பை

827. அதிரப் பொருவது தும்பை யாகும்.

என்பது, பகைவர் நடுங்க யுத்தஞ்செய்தல் தும்பை. (59)

வாகை

828. மாற்றா ரோட வருத்தி வெல்வது
          வாகை யெனப்பெயர் வைக்கப் படுமே.

என்பது, வருத்தமெய்திப் பகைவர் பின்னிட்டோட வெற்றி கொளல் வாகை.