பக்கம் எண் :
 
பொருளதிகாரம்262முத்துவீரியம்

குறையுற்று நிற்றல்

என்பது, தலைமகள் வாட்டங்கண்டு ஐயுறாநின்ற தோழியிடைச் சென்று, யான்
உங்களுக்கெல்லாத் தொழிலுக்கும் வல்லேன், நீயிர் வேண்டுவ தொன்று கூறுமின், அது
செய்யக் குறையில்லையெனத், தாழ்ந்த சொல்லால் தலைமகன் தன்னினைவு தோன்ற
ஐயுறக்கூறல்.

(வ-று.)

மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறிதிரைமீன்
படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றில்
கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல்செய்கோ
தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே. (திருக். 63)

அவன் குறிப்பறிதல்

என்பது, குறையுறா நின்றவன் முகத்தே தலைமகளது செயல் புலப்படக் கண்டு,
இவ்வண்ணல் குறிப்பு இவளிடத்ததெனத், தோழி தலைமகன் நினைவு துணிந்துணரா நிற்றல்.

(வ-று.)

அளியமன் னும்மொன் றுடைத்தண்ண லெண்ணரன் தில்லையன்னாள்
கிளியைமன் னுங்கடி யச்செல்ல நிற்பிற் கிளரளகத்
தளியமர்ந் தேறின் வறிதே யிருப்பிற் பளிங்கடுத்த
ஒளியமர்ந் தாங்கொன்று போன்றொன்று தோன்றும் ஒளிமுகத்தே. (திருக். 64)

அவள் குறிப்பறிதல்

என்பது, தலைமகன் எண்ண மறிந்த தோழி, இவளிடத்து இவன் நினைவேயன்றி
இவனிடத்தில் இவளெண்ணமும் உண்டோவெனத் தலைமகளை நோக்க, அவள் முகத்தேயும்
அவன்செயல் புலப்படக் கண்டு, இவ்வொண்ணுதல் குறிப்பும் ஒன்றுடைத்தென, அவளுடைய
எண்ணமுந் துணிந் துணரா நிற்றல்.

(வ-று.)

பிழைகொண் டொருவிக் கெடாதன்பு செய்யிற் பிறவியென்னும்
முழைகொண் டொருவன்செல் லாமைநின் றம்பலத் தாடுமுன்னோன்
உழைகொண் டொருங்கிரு நோக்கம் பயின்றவெம் மொண்ணுதன்மாந்
தழைகொண் டொருவனென் னாமுன்ன முள்ளந் தழைத்திடுமே. (திருக். 65)