பக்கம் எண் :
 
பொருளதிகாரம்365முத்துவீரியம்

மருவுதலுரைத்தல்

என்பது, கற்புப் பயப்புரைத்த செவிலி, வேந்தற்குற்றுழிப் பிரியினும்,
அவனூருந்தேரும் வினைமுடித்துத் தன் னிலையினல்லது புறத்துத் தங்காது, அவளும்
அவனையொழிய மற்றோர் தெய்வமும் மனத்தானும் நினைந்தறியாள், இஃது இவர்
காதலென, அவ்விருவர் காதலும் மருவுதல் கூறல்.

(வ-று.)

மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுணனாந்
தென்னவன் ஏத்துசிற் றம்பலத் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூவலன் னாளுமற் றோர்தெய்வம் முன்னலளே. (திருக். 304)

கலவியின்பங் கூறல்

என்பது, இருவர் காதலு மருவுதல் கூறின செவிலி, இவ்விருவருடைய காதலுங்
களிப்புமின்ப வெள்ளத்திடை யழுந்தப் புகுகின்ற தோருயிர் ஓருடம்பாற்றுய்த்த
லாராமையான், இரண்டுடம்பைக் கொண்டு, அவ்வின்ப வெள்ளத்திடைக் கிடந்து
திளைத்ததனோ டொக்கும், அதுவன்றி, அவ்வின்ப வெள்ளமொரு காலத்தும் வற்றுவது
முற்றுவதுஞ் செய்யாதென, நற்றாய்க்கு அவர் கலவியின்பங் கூறல்.

(வ-று.)

ஆனந்த வெள்ளத் தழுந்துமோ ராருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதிவ் வணிநலமே. (திருக். 307) (2)

மணஞ்சிறப்புரைத்தல் முற்றும்.

 

கற்பிற் பிரிவின் வகை

855. ஓதல் காவல் பகைதணி வினையே
     வேந்தற் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்
     றாங்கவ் வாறே யவ்வயிற் பிரிவே.