பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்41முத்துவீரியம்

(இ-ள்.) சொல், சங்கதமெனவும், பாகதமெனவும், சநுக்கிரக மெனவும், அவப்பிரஞ்சன
மெனவும் நான்கு வகைப்படும். (27)

தேவமொழி

142. சங்கதஞ் சநுக்கிரகந் தருநிலத் தவருரை.

(இ-ள்.) சங்கதமுஞ் சநுக்கிரகமுந் தேவர்மொழியாகும். (28)

இழிசனர் மொழி

143. அவப்பிரஞ் சனமசே தனர்மொழி யாகும்.

(இ-ள்.) அவப்பிரஞ்சன மிழிசனர் மொழியாகும். (29)

பாகதமொழி

144. எல்லா நாட்டினு மியல்வது பாகதம்.

(இ-ள்.) நாடுகளெல்லாம் வழங்குவது பாகதமாம். (30)

பாகதத்தின் வகை

145. தற்பவந் தேசிகந் தற்சம மெனப்படும்.

(இ-ள்.) பாகதம், தற்பவமெனவும், தேசிகமெனவும், தற்சமமெனவும்
மூன்றுவகைப்படுமெனவறிக. (31)

தற்பவம்

146. ஆரியச் சிறப்பெழுத் தாற்பொதுச் சிறப்பால்
     ஆனவீ ரெழுத்தா லமைவது தற்பவம்.

(இ-ள்.) ஆரியச் சிறப்பெழுத்தானும் பொதுவுஞ் சிறப்புமாகிய விரண்டெழுத்தானுந்
தமிழிற் சிதைந்து வருவது தற்பவமாமென வறிக.

(வ-று.) சுகி, போகி, சிறப்பு, அரன், அரி, பொது. (32)

தேசிகம்

147. தேசிக மென்பது திசைச்சொல் லாகும்.