பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்42முத்துவீரியம்

(இ-ள்.) தேசிக மென்பது திசைச் சொல்லாம்.

(வ-று.) தாய், தள்ளை, தந்தை, அச்சன், பிறவுமன்ன. (33)

தற்சமம்

148. ஆரியந் தமிழ்பொது வாமொழி தற்சமம்

(இ-ள்.) ஆரியத்திற்குந் தமிழிற்கும் பொதுவெழுத்தாலாகிய மொழி தற்சமமாமென்க.

(வ-று.) அமலம், கமலம், காரணம் பிறவுமன்ன. (34)

சந்தியின் வகை

149. சந்தி தீர்க்கங் குணமே விருத்தி
     எனமூ வகைப்படு மென்மனார் புலவர்.

(இ-ள்.) சந்தி, தீர்க்கசந்தியெனவும், குணசந்தி யெனவும், விருத்தி சந்தியெனவும்
மூவகைப்படுமென்க. (35)

தீர்க்கசந்தி

150. அ, ஆ, விறுதிமுன் அ, ஆ, வரினே
     இருமையுங் கெடவா வேற்கு மென்ப.

(இ-ள்.) அகர ஆகாரங்களை இறுதியாகிய மொழிக்கு முன், அகர ஆகாரங்களை
முதலாகிய சொல்வரின் நிலைமொழியீறும் வருமொழி முதலுங் கெட்டு ஆகாரமாகும்.

(வ-று.) பத+அம்புயம்=பதாம்புயம். சேநா+அதிபதி=சேநாதிபதி எனவரும். (36)

இதுவுமது

151. இ, ஈ, யிறுதிமுன் இ, ஈ, வரினே
    இருமையுங் கெடவீ யேற்கு மென்ப.

(இ-ள்.) இகர ஈகாரங்களை இறுதியாகிய மொழிக்கு முன் இகர ஈகாரங்கள் முதலாகிய
சொல்வரின் நிலைமொழி யிறுதியும் வருமொழி முதலுங் கெட்டு ஈகாரமாகும்.

(வ-று.) மகி+இந்திரன்=மகீந்திரன், கரீ+இந்திரன்=கரீந்திரன் எனவரும். (37)