| யாப்பதிகாரம் | 410 | முத்துவீரியம் |  
  
வஞ்சிப்பாவிற் குரிய சீர்கள் 
      867. நிரையசை யடைந்து கனியென
      நேர்வது 
           வஞ்சிக் குரியவாம் வழுத்துங்
      காலே. 
      என்பது, இரண்டசையானாகிய
      நான்குசீரினது இறுதியினும் நிரையசை யடைந்து 
      தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி
      யென மூன்றசையான் வருகிற 
      நான்குசீரும் வஞ்சிப் பாவிற்குரியன. 
      (வ-று.) 
      பூந்தாமரைப் போதலமரத் 
      தேம்புனலிடை மீன்றிரிதரும் 
      வளவயலிடைக் களவயின்மகிழ் 
      வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் 
      மனைச்சிலம்பிய மணமுரசொலி 
      வயற்கம்பலைக் கயலார்ப்பவும், 
      நாளும், 
      மகிழு மகிழ்தூஉங் கூரன் 
      புகழ்த லானாப் பெருவண் மையனே. (6) 
      பொதுச்சீர்கள் 
      868. தண்ணிழல் தண்பூ நறும்பூ
      நறுநிழல் 
           புணர்ந்து வருவது பொதுச்சீ ராகும். 
      என்பது, தண்ணிழலடைந்து,
      தேமாந்தண்ணிழல், புளிமாந் தண்ணிழல், 
      கருவிளந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல் எனவும்,
      தண்பூவடைந்து, தேமாந்தண் பூ, 
      புளிமாந்தண் பூ, கருவிளந்தண் பூ, கூவிளந்தண் பூ எனவும், நறும் பூ
      வடைந்து தேமாநறும் 
      பூ, புளிமாநறும் பூ,
      கருவிளநறும் பூ, கூவிளநறும் பூ எனவும், நறுநிழலடைந்து 
      தேமாநறுநிழல், புளிமாநறுநிழல், கருவிளநறுநிழல்,
      கூவிளநறுநிழல் எனவும் 
      நான்கசையான் வருகிற பதினாறுசீரும் பொதுச்
      சீர்க்குரியன. 
      (வ-று.) 
      அள்ளற்பள்ளத் தகன்சோணாட்டு 
      வேங்கைவாயின் வியன்குன்றூரன். (7) 
      ஓரசைச்சீர் 
      869. ஓரசை நின்றுஞ் சீரா கும்மே. 
			
				
				 |