பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்46முத்துவீரியம்

(இ-ள்.) மருவிய சொற்களும், மயங்குதலியன்ற சொற்களும், புணருநிலைமைக்கண்
உரியனவுளவாமென்க.

(வ-று.) முன்றில், மீகண், மரூஉ, தெய்வமால்வரை.

(வி-ரை.) இது தொல்காப்பிய நூற்பாவாகும். இதற்கு நச்சினார்க்கினியர்
‘மரு மொழியும்’ இன் தொகுதி மயங்கியல் மொழியும் எனப் பிரித்துப் பொருள் காண்பர்.
அதனைத் தழுவி இவ்வுரை இயன்றுள்ளது. மரூஉ மொழியாக வரும் சொற்களும், பொருள்
அமைப்பிற்கேற்ப நில்லாது இன்னோசை தருதற்காக இடையில் சில சொற்களை ஏற்று
மயங்கி நிற்கும் சொற்களும் நிலைமொழியும் வருமொழியுமாய் நின்று புணர்தற்குரியன
என்பது இந்நூற்பாவின் கருத்தாகும்.

இவற்றில் மீகண், முன்றில் என்பனவற்றிற்குரிய புணர்ச்சி யிலக்கணத்தைப்
புணரியலில ககக, கஅகஆம் நூற்பாக்களில் முறையே காணலாம்.

தெய்வ வரை என நிற்க வேண்டுவது இடையில் மால் என்பதோடு சேர்ந்து மகர
வொற்றுக் கெட்டு தெய்வமால் வரை என நின்றது. இதனையே மயங்குதலியன்ற சொற்கள்
என்றார் உரையாசிரியர். (5)

புணர்ச்சியின் வகை

165. அல்வழி வேற்றுமை யாமிரு பாலன.

(இ-ள்.) புணர்ச்சி அல்வழிப்புணர்ச்சி, வேற்றுமைப் புணர்ச்சியென
இருபகுதியவாமென்க. (6)

அல்வழி

166. அவற்றுள்,
     அல்வழி வினைத்தொகை யன்மொழி யுவமை
     உம்மை குணமெழு வாய்விளி யிடையுரி
     அடுக்கீ ரெச்சமுற் றாறொடு மெட்டே.

(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள், அல்வழிப் புணர்ச்சி, வினைத்தொகையும்,
அன்மொழித் தொகையும், உவமைத் தொகையும், உம்மைத்தொகையும், பண்புத் தொகையும்,
எழுவாய்த் தொடரும், விளித்தொடரும், இடைத்தொடரும், உரித்தொடரும், அடுக்குத்
தொடரும், பெயரெச்சத் தொடரும், வினையெச்சத் தொடரும், தெரிநிலை வினைமுற்றுத்
தொடரும், குறிப்பு வினைமுற்றுத் தொடருமெனப் பதினான்கு வகைப்படும்.

(வ-று.) அடுகளிறு, பொற்றொடி, கிளிமொழி, ஒன்றரை, ஆதிபகவன், சாத்தன்மகன்,
கொற்றா போகேல், தருங்கொல், நனிபேதை.