பக்கம் எண் :
 
அணியதிகாரம்513முத்துவீரியம்

2. பொருளணி இயல்

தன்மையணி

1154. எவ்வகைப் பொருளு மெடுத்தத னியல்பை
     அறைவது தன்மையா மாயுங் காலே.

என்பது, எவ்வகைப்பட்ட பொருளையுங் தெரிந்து அதனுடைய தன்மையைக் கூறல்
தன்மையணியாம். (1)

அதன்வகை

1155. குணம்பொரு டொழில்குலத் தொடுபுலப் படுமே.

என்பது, முற்கூறிய தன்மையணி, பண்பும், பொருளும், வினையும், சாதியுமாகிய
நான்கனோடும் புலப்படும்.

(வ-று.)

பண்புத்தன்மை:

எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில். (குறள்-1202)

பொருட்டன்மை:

கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யும்
அருவினையு மாண்ட தமைச்சு. (குறள்-631)

தொழிற்றன்மை:

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு. (குறள்-31)

சாதித்தன்மை:

பத்தித் தகட்ட கறைமிடற்ற பைவிரியுந்
துத்திக் கவைநாத் துளையெயிற்ற-மெய்த்தவத்தோர்
ஆகத்தா னம்பலத்தா னாரா வமுதணங்கின்
பாகத்தான் சாத்தும் பணி. (தண்டி-மேற்கோள்) (2)

உவமையணி

1156. பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின்
      ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந்
      தொப்புமை தோன்றச் செப்பினஃ துவமை.