பக்கம் எண் :
 
அணியதிகாரம்515முத்துவீரியம்

மின்னி யாங்கவன் முரசென விண்ணிடை யதிர்ந்து
பொன்னங் குன்றின்மே லவன்கொடை போன்மெனப் பொழிந்த.(5)

இதரேதரவுவமை

1159. ஒருகாற் பொருளுவம மாகியு முவமை
     ஒருகாற் பொருளா கியுமொரு தொடர்ச்சி
     இடையே போதுவ திதரே தரமே.

என்பது, ஒரு தொடர்ச்சிக்கண், பொருள், ஒருகால் உவமையாகியும், உவமை
ஒருகால், பொருளாகியும் வருவது, இதரேதரவுவமை.

(வ-று.)

களிக்குங் கயல்போலு நின்கணின் கண்போற்
களிக்குங் கயலுங் கனிவாய்த்-தளிர்க்கொடியே
தாமரை போன்மலரு நின்முக நின்முகம்போல்
தாமரையுஞ் செவ்வி தரும். (தண்டி-மேற்) (6)

உண்மை யுவமை

1160. உவமையைக் கூறி மறுத்துப் பொருளை
      உரைத்து முடிப்பஃ துண்மையா மெனலே.

என்பது, உவமைப் பொருளைச் சொல்லிப் பொருளை மறுத்துக் கூறல்,
உண்மையுவமை.

(வ-று.)

தாமரை யன்று முகமேயீ தீங்கிவையுங்
காமருவண் டல்ல கருநெடுங்கண்-தேமருவு
வல்லியி னல்ல ளிவளென் மனங்கவரும்
அல்லி மலர்க்கோதை யாள். (தண்டி-மேற்) (7)

மறு பொருளுவமை

1161. புகன்றுமுன் வைத்த பொருட்கு நிகர்வதோர்
     பொருள்பினும் வைப்பது மறுபொரு ளாகும்.

என்பது, முற்கூறி வைத்த பொருளுக்கு ஒப்பாகிய வேறொரு பொருளைக் கூறிப்
பின்னும் வைப்பது மறுபொருளுவமை.