பக்கம் எண் :
 
அணியதிகாரம்550முத்துவீரியம்

புகழாப் புகழ்ச்சியணி

1253. பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
      புலப்படல் புகழாப் புகழ்ச்சி யாகும்.

என்பது, பழிப்பதுபோலும் பாகுபாட்டானொரு பொருளுக்கு மேம்பாடு தோன்றல்
புகழாப் புகழ்ச்சி.

(வ-று.)

போர்வேலின் வென்றதூஉம் பல்புகழிற் போர்த்ததூஉம்
தார்மேவு திண்புயத்துத் தாங்கியதூஉம்-நீர்நாடன்
தேரடிக்கீழ்க் காப்பதூஉஞ் செங்கட் டிருநெடுமா
லோரடிக்கீழ் வைத்த வுலகு. (தண்டி-மேற்) (100)

நிதரிசனவணி

1254. ஒருவகை யானொழு குவதொன் றற்குப்
      பொருந்தின வொருபயன் வேறொன் றற்கு
      நன்மை தீமைநாட் டுவதுநி தரிசனம்.

என்பது, ஒரு வகையானிகழ்வ தொன்றனுக்குப் பொருந்திய வொருபயன்
வேறொன்றனுக்கும் நன்மையேனும் தீமையேனுந் தரல் நிதரிசனம்.

(வ-று.)

பிறர்செல்வங் கண்டாற் பெரியோர் மகிழ்வுஞ்
சிறியோர் பொறாத திறமு-மறிவுறீஇச்
செங்கமல மெய்மலர்ந்த தேங்குமுத மேயசைந்த
பொங்கொளியோன் வீறெய்தும் போழ்து. (தண்டி-மேற்) (101)

புணர்நிலையணி

1255. விழுமிய வினையினும் குணத்தினு மிருபொருட்
      கொருபுணர் புணர்ப்பது புணர்நிலை யாகும்.

என்பது, வினையினானும் பண்பினானும் இரண்டு பொருள்களுக்கு ஒருபுணர்ச்சியைக்
கூறல் புணர்நிலையணி.

(வ-று.)

வேண்டுருவங் கொண்டு கருகி வெளிபரந்து
நீண்ட முகிலுடனே நீர்பொழிந்த-வாண்டகையோன்
மேவல் விரும்பும் பெருநசையான் மெல்லாவி
காவல் புரிந்திருந்தோர் கண். (தண்டி-மேற்) (102)