பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்8முத்துவீரியம்

இங்ஙனமே ஏனைய சொல், பொருள், யாப்பு, அணி அதிகாரங்களின்
தோற்றுவாயிலும இறைவனைப் பொதுப்படக் கூறுவர். ‘அப்பொருள் அடிதொழுது’
என்பதால் தெய்வ வணக்கமும், ‘அறைகுவன் எழுத்தே’ என்பதால் செயப்படு பொருளும்
எய்தப் படுதலின் இது தற்சிறப்புப் பாயிரமாயிற்று. அதிகரித்தல் - மேற்படுதல். ஒரு
நூலிலிருக்கும் பல பகுதிகளிலும், எவ்வெப் பகுதியில் எவ்வெப் பொருள்கள்
தலைமையாக எடுத்துரைக்கப்படுகின்றனவோ அவற்றைக் கொண்டு அவ்வப் பகுதிகள்
பெயர் பெறும். எழுத்ததிகாரம் என்ற பகுதியில் எழுத்துக்களின் இலக்கணமே
தலைமையாகக்கொண்டு அப்பகுதி முழுதும் எடுத்துச் சொல்லப்படுதலால்
எழுத்ததிகாரமாயிற்று.

தண்டத்தலைவர் - தானைத்தலைவர். ‘நல்லவை யெல்லாம் தீயவாம்’ என்ற
திருக்குறளில் ஊழ் என்பது அதிகாரத்தான் வந்தது என எழுதியிருப்பது பின்னையதற்குக்
காட்டாகும்.

1. எழுத்தியல்

எழுத்தென்றற்குக் காரணம்

1. எழுதப் படுதலி னெழுத்தா கும்மே.

(இ-ள்.) கையில் எழுத்தாணியைக் கொண்டு மடன்மேல் எழுதப்படுதலால்
எழுத்தாகுமென்க. (1)

அதன் வடிவு

2. எழுத்தொலி வடிவரி வடிவையு மேற்கும்.

(இ-ள்.) எழுத்துச் செவிப்புலனால் அறியும் ஓசை வடிவையும், கட்புலனால் அறியும்
வரி வடிவையும் ஏற்குமென்க. (2)

எழுத்தின் மறுபெயர்கள்

3. இரேகை வரிபொறி யெழுத்தின் பெயரே.

(இ-ள்.) இரேகையெனினும், வரியெனினும், பொறியெனினும் எழுத்தென்னும்
ஒருபொருட்கிளவி. (3)

எழுத்தின்வகை

4. அதுமுதல் சார்பென வாமிரு பாலன.

(இ-ள்.) அவ்வெழுத்து, முதலெழுத்தெனவும், சார்பெழுத்தெனவும்
இருபகுதியவாகுமென்க. (4)