பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்9முத்துவீரியம்

முதல் எழுத்தின்வகை

5. உயிருட லெனமுத லோரிரு வகைய.

(இ-ள்.) முதலெழுத்து, உயிரெழுத் தெனவும் மெய்யெழுத்தெனவும் இரண்டு
பிரிவினவாமென்க. (5)

உயிர் எழுத்து

6. அகர முதலுயி ராறிரண் டாகும்.

(இ-ள்.) உயிரெழுத்து அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள ஆகிய
பன்னிரண்டுமாமென்க. (6)

உயிர் என்பதன் மறுபெயர்கள்

7. அச்சாவி சுரம்பூத மாமுயி ரென்ப.

(இ-ள்.) அச்செனினும், ஆவியெனினும், சுரமெனினும், பூதமெனினும் உயிரென்னும்
ஒருபொருட்கிளவி. (7)

குற்றெழுத்து

8. அ, இ, உ, எ, ஒக்குறி லாகும்.

(இ-ள்.) முற்கூறிய உயிர் பன்னிரண்டனுள், அ, இ, உ, எ, ஒ இவை ஐந்தும்
குற்றெழுத்தாமென்க. (8)

குறுமையின் மறுபெயர்கள்

9. குறுமை யிரச்சுவங் குறிலெனப் படுமே.

(இ-ள்.) குறுமையெனினும், இரச்சுவமெனினும், குற்றெழுத் தென்னும்
ஒருபொருட்கிளவி. (9)

நெட்டெழுத்து

10. ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒளநெடில்.

(இ-ள்.) மேற்கூறிய உயிர் பன்னிரண்டனுள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள இவ்வேழும்
நெட்டெழுத்தாமென்க. (10)