இ - ள்: எழுவாய் வேற்றுமை என்பது பெயர்; அதுதான்
பொருண்மை சுட்டல் வியங்கோள் வருதல், வினைநிலை உரைத்தல்,
வினாவிற் கேற்றல், பண்பு கொள வருதல், பெயர் கொள வருதல் என்னும்
ஆறு பயனிலையும் ஏற்றலும், இறுதியில் ஐ, ஒடு, கு, இன், அது, கண்
என்னும் ஆறுருபும் ஏற்றலும், காலம் மூன்றுந்தோன்றாமையும் என்னும்
இலக்கணத்தை யுடைத்து எ-று.
வ - று: அது பயனிலை ஆறும் ஏற்கப்படுதலாவது; பொருண்மை
சுட்டல், ஆ உண்டு என்றல்; வியங்கோள் வருதல், ஆ செல்க என்றல்;
வினை நிலை உரைத்தல், ஆ கிடந்தது என்றல்; வினாவிற்கேற்றல், ஆவோ
என்றல்; பண்புகொள வருதல், ஆ கரிது என்றல்; பெயர்கொள வருதல், ஆ
ஒன்று என்றல். என்னை?
பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று
அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே.
(தொல், வேற். 5.)
என்றாராகலின்.
இனி, உருபு ஆறும் ஏற்றலாவது; ஆவை, ஆவொடு, ஆவிற்கு,
ஆவின், ஆவினது, ஆவின்கண் என உருபு ஏற்றல். என்னை?
கூறிய முறையி னுருபுநிலை திரியா
தீறுபெயர்க் காகு மியற்கைய வென்ப.
(தொல். வேற். 8)
என்றாராகலின்.
‘பின்பு' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், தொகைச் சொற்களும்,
பயனிலையும் உருபும் ஏற்று எழுவாய் வேற்றுமையாய் நடக்கும் எனக்
கொள்க. அவை வருமாறு: யானைக்கோடு உண்டு, யானைக்கோடு செல்க,
யானைக்கோடு வீழ்ந்தது, யானைக் கோடோ? யானைக்கோடு வெளிது,
யானைக்கோடு இரண்டு என்பன பயனிலை 1 பெற்றவாறு.
---------------------
1. ஈண்டுப் பயனிலை என்றது பொருண்மைசுட்டல் முதலிய ஆறு
பயனிலைகளை என்க.
|