நான்காம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும்
19. ஓதுங் குகர உருபுநான் காவதஃ
தியாதிடத்தும் ஈபொருளை ஏற்குமாம் - கோதிலா
தின்னுருபைந் தாவ திதனினித் தன்மைத்தி
தென்னு மொருநான் கிடத்து.
எ-ன்: நான்காம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும் ஆமாறு
உணர்த்துதல் நுதலிற்று.
இ-ள்: குகர உருபு நான்காம் வேற்றுமை: அஃது எவ்விடத்தும் ஈ
பொருளை ஏற்று நிற்கும்: இன் உருபு ஐந்தாம் வேற்றுமை; அதுதான்
இதனின் இத்தன்மைத்து இது என்னும் உவமம், நீக்கம், எல்லை, ஏது
என்னும் நான் கிடத்தும் வரும் எ-று.
வ-று: கரும்பிற்கு வேலி, சாத்தற்கு மக்க ளுடம்பட்டார், கடி
சூத்திரதிற்குப் பொன், வரிசைக்கு உழும் என்பன. பிறவும் அன்ன.
ஊரிற் றீர்ந்தான், பனையின் வீழ் பழம் இவை நீக்கத்தின்கண்
வந்தன. கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு இவை எல்லைக்கண் வந்தன.
காக்கையிற் கரிது களம்பழம், இதனின் இற்று இது இவை உவமைக்கண்
வந்தன. முயற்சி இறத்தலின் இசை நிலையாது, தவத்திற் பெற்றான் வீடு
இவை ஏதுப் பொருட்கண் வந்தன என்னை?
உவம நீக்க மெல்லை யேதுவென்
றவைநான் கென்ப வைந்தா முருபே
என்றா ராகலின்.
‘கோதிலா' என்று மிகுத்துச் சொல்லியவதனால், ஏதுப் பொருளிடத்து
மூன்றாம் வேற்றுமையும் ஐந்தாம் வேற்றுமையும் ஒக்கும். அவை:
வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி .
(குறள், 542)
என்புழி, வானோக்கி வாழு மென்றால் வானானாய பயனோக்கி வாழும்,
வானினாய பயனோக்கி வாழும் எனக் கொள்க. பிறவும் அன்ன.
(4)
|