பக்கம் எண் :
 
சொல் அதிகாரம்89

     ‘ஓரும்' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், காலங்களைப் பற்றித்
திரிந்து வருஞ் சொற்களே அன்றித் தோன்றுவனவும், கெடுவனவும்,
இயல்பாவனவும் உள. அவையாவன: சகர முதலாய சொற்கள்
முற்காலத்தின்றிப் பின்பு தோன்றின; அழாஅன், புழாஅன், குயின், வயின்
என்பன முற்காலத்து நடந்து இக்காலத்துக் கெட்டன. சோறு, கூறை, பால்,
பழம் என்பன இயல்பாயின. நிலம், நீர், தீ, வளி, வான் என்பனவும் அது.
பிறவும் அன்ன.                                            
 (7)
       

மூவகைப் பெயர்க்கும் ஆவதோர் இலக்கணம்


37. பாங்கார் பெயர்வினை கொண்டன்றிப் பாறோன்றா
   ஆங்கு விரவுப்பேர் அஃறிணைப்பேர் - ஓங்கிய
   கள்ளொடு வந்தால் இருதிணைக்கும் பன்மைப்பால்
   ஒள்ளிழையாய் தோன்றலும் உண்டு.

    
எ - ன்: மூன்று பகுதிப் பெயர்க்கும் தோன்றுவதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

    
இ - ள்: விரவுப் பெயரும், அஃறிணைப் பெயரும், பெயரையும்
வினையையும் கொண்டன்றிப் பால் தோன்றா: அஃறிணைப் பெயர்
கள்ளொடு வந்தாற் பன்மைப்பால் தோன்றும்; உயர்திணை ஒருமைப்
பெயரும் ஒரோவழிக் கள்ளொடு வந்தாற் பன்மைப்பால் தோன்றுவனவும்
உள எ-று.

       அவை வருமாறு: சாத்தன் என்றால் இன்னபால் என்று
அறியலாகாது; அதனை வினை தலைப்பெய்து வந்தான், வந்தது என்றறிக;
வினை தலைப்பெய்து அறிந்தவாறு. சாத்தன் - ஒருவன், ஒன்று எனப் பெயர்
தலைப்பெய்து அறிந்தவாறு. இனி, வினை தலைப்பெய்தும் பெயர்
தலைப்பெய்தும் சாத்தி என்பதையும் இவ்வண்ணமே அறிந்துகொள்க. இவை
விரவுப்பெயர்.

      இனிப், பசு என்றாற் பால் தோன்றாது;  அதனை வினை
தலைப்பெய்து வந்தது, வந்தன என ஒருமை பன்மை யறிக. இனிப் பசு -
ஒன்று, பல என்று பெயர் தலைப்பெய்தும் அறிக. என்னை?

    
 திணையும் பாலுந் தெரியா நின்றுழி
     வினையும் பெயரும் வேற்றுமை விளக்கும் 

என்றாராகலின்.