பசுக்கள், மரங்கள், கற்கள் எனக் கள்ளொடு வந்து அஃறிணைப்
பன்மைப்பால் தோன்றின. ஆண், பெண், என்பன உயர்திணை, ஒருமையே
யாயினும் ஆண்கள் பெண்கள் என உயர்திணைப் பன்மையாயின. பிறவும்
அன்ன. என்னை?
கள்ளென் னிறுதி யிருதிணைப் பன்மையுங்
கொள்ளும் பகர வகரமு மற்றே
என்றாராகலின்.
தோன்றலும் உண்டு என்ற உம்மையால் தோன்றாமையும்
உண்டோ?
எனின்; உண்டு. அது உயர்திணையிடத்து அடிகள், முனிகள்
எனக்கள்ளொடும் வந்து உயர்திணை ஒருமையாயிற்று.
(8)
உயர்திணைப் பெயர்க்கு ஆவது ஓர் இலக்கணம்
38. ஆய்ந்த உயர்திணைப்பேர் ஆஓவாஞ் செய்யுளிடை
ஏய்ந்தநிகழ் காலத் தியல்வினையால் - வாய்ந்த
உயர்திணைப் பாலொருமை தோன்றும்விர வுப்பேர்
இயலும் வழக்கி னிடத்து.
எ - ன்:
உயர்திணைப் பெயர்க்கு எய்தியதோர் இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
உயர்திணைப் பெயர் செய்யுளிடத்து ஆகாரம் ஓகாரமாய்
நடக்கும்; விரவுப்பெயர் நிகழ்காலத்து வினையாற் சொன்னாற் பொதுப்பட்டு
நில்லாதே உயர்திணை யொருமை தோன்றுவனவும் உள எ-று.
அவை வருமாறு: வில்லான், வில்லோன், தொடியாள், தொடியோள்;
சான்றார், சான்றோர்; என ஆ ஓ ஆனவாறு கண்டு கொள்க. என்னை?
ஆவோ வாகும் பெயருமா ருளவே
யாயிட னறிதல் செய்யு ளுள்ளே
(தொல். பெயர். 41)
என்றாராகலின்.
சாத்தன் உழும், சாத்தி கறக்கும் என்றாற் பாலறிய வாரா;
அவை
சாத்தன் எழுதும், வாசிக்கும்; சாத்தி சாந்தரைக்கும், பூத்தொடுக்கும் என
உயர்திணை யொருமை தோன்றினவாறு கண்டு கொள்க.
|