பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்011
ஆகும். அலகு கீழ், நடு, மேல், அளவு என நால்வகைப்படும்; கூட்டு, குறிப்பு எழுத்துகள் இத்துணை என்று வரையறுத்துக் கூற முடியாதனவாகும் என்றவாறு.
உயிர் முதலிய எழுத்துகள் எவையெவை என்பதை இலக்கண மரபாற் பெற்றாம். அலகெழுத்துகள் இத்துணை எனக் கூறாது நால்வகை எனக் கூறியது பின்னால் ஒவ்வோர் வகையிலும் பற்பல வரிவடிவங்கள் கூறப்படுதல் பற்றியாகும்.
அடுத்து எழுத்தெனப்படுவது வரிவடிவம், ஒலிவடிவம் ஆகிய இரண்டினையும் உடையது என்பது கூறப்படும்.
(4)
5.எழுத்தெனல் வடிவுடன் ஓசையும் உடைத்துஅவற்று
 உருஇயல்பு அனைத்தும் உணர்வார் சிற்சிலர்;
 ஒலிஇயல்பு உலகோர் உரைக்கும் மாற்றம்ஒவ்
 வொன்றிற் சிற்சில ஒளிர்தரும் அன்றே.
எழுத்தெனப்படுவது தனக்கென ஒரு வரிவடிவத்தையும் ஓர் ஒலி வடிவத்தையும் உடையது; எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாகிய சிலர் வரி வடிவத்தை முற்றும் அறிவர். மக்களின் பேச்சுமொழி ஒவ்வொன்றிலும் சில எழுத்துகளின் ஒலி வடிவம் விளங்கும் என்றவாறு.
மக்கள் தொகையில் சிறு பகுதியினரே கல்விக்கண் படைத்து எழுத்தின் வரி வடிவத்தை உணரும் திறமுடையராதல் பற்றிச் சிற்சிலர் என்றார். கல்லாமாக்களுக்கும் ஒலி வடிவம் புலப்படு மாதலின் அனைவரையும் உள்ளடக்கி உலகோர் என்றார். இஃது உயர்ந்தோர் மாட்டன்று.
ஒவ்வொரு வார்த்தையிலும் அதன் பகுதியாகிய எழுத்துகள் மட்டும் ஒலித்தலினாலும், தமிழிற் பெரும்பாலும் ஐந்தெழுத்தின் மிக்குடைய தனிச் சொல் இன்மையானும் சிற்சில ஒளிர்தரும் என்றார். ஒவ்வொன்றில் என்புழி முற்றும்மை விகாரத்தாற் றொக்கது.