பொருள் இலக்கணத்தைப் புதிய முறையில் நிறைவுசெய்த ஆசிரியர் நிறுத்தமுறையானே அடுத்து யாப்பிலக்கணம் கூறத்தொடங்குகிறார், இவ் விலக்கணம் இயலிசைத் தமிழியல்பு, நாடகத் தமிழ் நிலை, வண்ணவியல்பு, மோனையியல்பு, எதுகை இயல்பு, நாற்கவியியல்பு, பனுவலியல்பு என ஏழு உட்பிரிவுகளை உடையது, இதன் மொத்த நூற்பாத் தொகை நூற்று முப்பத்து நான்கு ஆகும். | யாப்பின் அடிப்படை உறுப்பாகிய அசையும் சீரும் முன்பே சொல்லிலக்கணத்தின் சார்பியல்பில் கூறப்பட்டுவிட்டன. எனவே இவர் இங்கு நேராகப் பாவகைளின் இலக்கணம் சொல்லப் புகுந்து விடுகிறார். பா பாவினம் என்ற பாகுபாடு, தளைகளின் இலக்கணங்கள், எதுகை மோனையல்லாத பிற தொடைகள் போன்ற யாப்பியற் செய்திகள் இதில் உரிய இடம் பெறவில்லை. சந்தக் குழிப்போடமைந்த வண்ணப் பாடல்களுக்குத் தெளிவான இலக்கணம் கூறுதல் இதற்கே உரிய தனிச் சிறப்பாகும். | இங்கும் இவர் சில இடங்களில் முன்னூல் ஆசிரியர்களிலிருந்து வேறுபட்டிருப்பதைக் காண முடிகிறது. இவ்வுரையில் கூறப்பட்ட பாக்களுக்கு மேற்கோள் காட்டப்படுகையில் இயன்ற அளவு இவர் வாக்கே கையாளப்பட்டுள்ளது, இவர் காட்டும் பாவோசை பற்றி நன்கு அறிய இதுதுணை செய்யும். எங்கெல்லாம் இவர் கருத்து மாறுபட்டிருக்கிறதோ அங்கு மாத்திரம் சிறிதளவு விளக்கம், மற்ற இடங்களில் நூற்பா, பொழிப்புரை மேற்கோள் மட்டும் என்ற வகையில் உரை வரையப்பட்டுள்ளது. மேற்கோளும் எல்லாப் பாவகைக்கும் காட்டப்படாமல் இன்றியமையாதன மட்டும் தரப்படுகின்றன. | இவ்வியல்பில் இவர் இயற்றமிழிற்குரிய யாப்பு வகைகள் யாவை, இசைத் தமிழிற்குரியவை எவை எனத் தெளிவாக |
|
|