பக்கம் எண் :
 
யாப்பிலக்கணம்370
கணக்கரும்பாற்றே என்றதனால் சிலப்பதிகாரத்தின் காதை, சிந்தாமணியின் இலம்பகம், பல தல புராணங்களின் அத்தியாயம் போன்றனவற்றையுங் கொள்க.
(572)
129.பைந்தமிழ்ப் புலவோர் பகரும் பனுவல்
 தொண்ணூற்று ஆறுஎனச் சொல்வார் சொல்லினும்
 லகரி முதற்கொடு நொண்டிஈறு ஆகிய
 வேறுபல் விதங்களும் விளங்குகின் றனவால்;
 யாமும் சிலவிதம் இயம்ப நாணுதுமே.
பசுமையான தமிழிற் புலமைமிக்க பாவலர்களால் இயற்றப்படும் பிரபந்த வகைகள் தொண்ணூற்றாறு எனச் சிலர் கூறுகின்றனர். என்றாலும் அவற்றுள் அடங்காத லகரி, நொண்டி போன்ற வேறு பல சிற்றிலக்கிய வகைகளும் இலக்கிய உலகில் காணப்படுகின்றன. எனவே சிற்றிலக்கியங்கள் இவ்வளவுதான் என்று ஓர் எண்ணிக்கை கொடுத்துக் கூற யாம் நாணுகின்றோம் என்றவாறு.
130.மழலையங் குழவியை வயிறுநொந்து ஈன்ற
 தாய்இடும் பெயரே தலைமிசைக் கொளல்போன்று
 அருந்தமிழ்ப் பனுவலும் ஆக்கியோன் அமைத்த
 பெயர்பொறுத்து உலகில் பிறங்கிடல் முறையே.
குதலைமொழி பேசும் அழகிய குழந்தை அதனை வயிற்றிற் சுமந்து வருந்திப் பெற்றெடுத்த அன்னை சூட்டும் பெயராலேயே சிறப்பாக வழங்கப்படுதல் போலத் தமிழ்ப் பிரபந்தமும் அதனை இயற்றியவன் உரைத்த பெயர் பெற்று விளங்குதல் தான் முறையாகும் என்றவாறு.
இதனால் நூலாசிரியனின் மனோதர்மத்திற்கேற்பப் புதுவகைப் பனுவல்களை இயற்றிக்கொள்ள வழிவகுக்கப்பட்டது. சதகம் என்றால் 100 பாடல். இவர் ஏழு சதகங்களைத் தொகுத்துச் சப்த சதகம் என ஒரு நூலும், 10 சதகங்களைத் தொகுத்து சதகப்பதிகம் என வேறோர் நூலும் செய்துள்ளார், அவ்வாறே பத்துப்பாட்டுள்ள பதிகங்கள் நூற்றைத்