பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்371
தொகுத்துப் பதிகச்சதகம் எனவும் ஒரு நூல் இயற்றியுள்ளார். இத்தகைய நூல்களையும், அதன் பெயர்களையும் இந்நூற்பாவால் அமைத்துக் கொள்ளலாம்.
இந்நூலின் பொதுப்பாயிரத்தில் இவர் இதே கருத்தை, ‘கடலின் மீன்பெயர் நுளையர்வாய் மொழியெனல் கடுக்கும் ‘டம்நி லாவிய செழுந்தமிழ்ப் புலவர்” என வேறோர்உவமையால் விளக்கினார்.
(529)
131.ஒருபெயர்க்கு உரியார் உலகினில் பலரால்;
 பனுவலும் அங்ஙனம் பகர்வது முறையே.
இவ்வுலகத்தில் ஒரே இயற்பெயரைப் பூண்டு பலர் விளங்குகின்றனர். இவ்வாறே ஒரே பெயரில் பல நூல்கள் தோன்றுவதில் தவறில்லை என்றவாறு.
இச்சூத்திரத்தால் மாலை, அந்தாதி, பதிசம், சதகம், அலங்காரம், விலாசம், மஞ்சரி போன்ற பொதுப்பெயர்களில் பல வகையான வேறுபட்ட பிரபந்தங்கள் நிலவுதல் தழுவி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
(530)
132.மற்றையர்க்கு ஆகாப் பெயர்புனை மாந்தரில்
 சிற்சில பனுவல் திகழ்வவும் உளவே.
தம்மைத் தவிர வேறு எவரும் வைத்துக்கொள்ளக் கூடாத சிறப்புப் பெயர்கள் சிலருக்கு இருக்கும். இலக்கியத்திலும் சில நூல்கள் இவ்வாறு மற்றவர்கள் ஆளக்கூடாத பெயர் பெற்று விளங்குகின்றன என்றவாறு.
சேரமான், வழுதி, வளவன் போன்ற குடிப்பெயர்களும், கலைமாமணி போன்ற சிறப்புப்பெயர்களும் அவற்றை உடையவர்களுக்கன்றி மற்றவர்க்கு ஆகாப் பெயர்களாம். சில நூல்களுக்கும் இது பொருந்தும் என்கிறார்.
குறள் வெண்பாக்களால் ஆன நூல்கள் யாவும் திருக்குறள் ஆகமாட்டா. நான்கடிப் பாக்களாலானவை அனைத்தும்