பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்508
இலக்கண நூலில் இலக்கிய வரலாற்றுச் செய்திகள் இடம் பெற்ற காரணத்தை இந்நூற்பா விளக்குகிறது. அது முன்பே இவ்வியல்பின் முப்பதாம் சூத்திர உரையில் கூறப்பட்டது. மொழிப் புலமை சமுதாய வளர்ச்சிக்கோ அன்றித் தனிப்பட்டவர்களின் உயர்வுக்கோ சற்றும் பயன் தராது என்பவர்கள் இன்றும் உளர். அத்தகையோரைக் குறித்து எழுந்ததுவே இந் நூற்பா,
இச் சூத்திரத்தால் இவ் வியல்பு நிறைவேற்றப்பட்டு அடுத்த செயல்வகை இயல்பிற்குத் தோற்றுவாய் செய்து கொள்ளப்படுகிறது.
(745)
IV. செயல்வகை இயல்பு
புலமை இலக்கணத்தின் முதல் இயல்பாகிய “தேற்ற இயல்பில்” ஒரு புலவன் தெளிய வேண்டிய செய்திகளும், அடுத்த “தவறியல்பில்” அவன் தவிர்க்க வேண்டிய குற்றங்களும் சுட்டிக்காட்டப்பட்டன, மூன்றாவதாகிய “மரபியல்பில்” இவ்வாறு தெளிந்து குறை நீங்கிய புலவர்களின் சிறப்பு இடம் பெற்றது. இம்முறையில் இவற்றை அறிந்துகொண்ட ஒரு தமிழ் மாணவன் எவ்வாறு செயற்படவேண்டும் என்பதை இவ் வியல்பு எடுத்துக் காட்டுகிறது. இதனானே இவறறின் முறைவைப்பும் தெற்றென விளங்கும்.
இவ்வாசிரியர் புலவர்களின் செயற்பாட்டைத் தொழில் நிலை, நடு நிலை, எதிர் நிலை, அருள் நிலை என நான்காகப் பகுத்துக் கொண்டு 41 நூற்பாக்களால் கூறுகிறார்., இவற்றின் விளக்கம் அவ்வப்பகுதியின் தோற்றுவாய்களில் வரையப்படும்.
புலமை இலக்கணத்தின் இறுதி இயல்பாகிய செயல்வகை இயல்பின் தலைச்சூத்திரம் இப்பிரிவு நான்கு உட்பிரிவுகளை உடையது என்று கூறி அமைகிறது.
104,தொழில்நிலை நடுநிலை எதிர்நிலை அருள்நிலை
 என்னும் நால்விதம் செயல்வகைப் பாற்றே.