பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்509
ஒரு புலவனின் செயல்முறை தொழில்நிலை, நடுநிலை எதிர்நிலை, அருள்நிலை என நால்வகைப்படும் என்றவாறு,
(746)
1. தொழில்நிலை
புலமையையே பொருளீட்டுதற் குரிய தொழிலாகக் கொள்ளக் கருதுவோர் சிறப்பாகவும், பிறர் பொதுவாகவும் கைக்கொள்ள வேண்டிய சில நெறிகள் இப்பிரிவில் கூறப்பட்டுள்ளன, இவற்றுள் சிலவற்றைத் தேற்றம், தவறு என்னும் இரண்டு இயல்புகளில் இடம்பெற்ற நூற்பாக்களாலேயே பெற முடியும்., எனினும் மாணவர் ஐயமின்றித் தெளிவுபெறவும், இவை புலமைத்தொழிலுக்கு இன்றியமையாதன என்பதை வலியுறுத்தும் பொருட்டும் இங்கு அநுவதிப்படுகின்றன, இப்பிரிவில் 9 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன.
105.தமிழ்க்கும், தனக்கும், சார்தரு நெறிக்கும்
 தன்இனத் தினர்க்கும் தவறுஉறா வண்ணம்
 முயல்வோன் புலமை முதன்மைத்து ஆமே,
தமிழ் மொழிக்கும், பாடும் தொழிலில் ஈடுபட்டுள்ள தனக்கும், தான் சார்ந்துள்ள சமயத்திற்கும், தமிழர்களாகிய தன் இனத்தினர்களுக்கும் எத்தகைய தீமையும் நேர்ந்து விடாதபடி விழிப்புடன் தொழில் புரிபவனின் அறிவாற்றல் தலைசிறந்தது ஆகும் என்றவாறு,
தமிழ்ப் புலவனுக்கு மொழிப்பற்று முக்கியமாக இருக்க வேண்டுமாதலின் முதலில் தமிழைக் கூறினார். தன் சுயநலத்தைக் கருதி ஒரு புலவன் தன் மொழி, சமயம், தமிழினம் ஆகியனவற்றிற்குத் தீதை பயக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்கிறார். சார்தரு நெறி என்புழி, “தெய்வத் துதிவழித் தேறாப் புலமை நைவும் சிறுமையும் நாணமும் தருமே”1 “தன்னுடைச் சமயத் தலைவனைப் பரவா நூல்வழி்ப் புலமை நுவல்கையும் தவறே”2 என்னும் இவர் கொள்கைகள்பற்றிச் சமயம் எனப் பொருள் உரைக்கப்பட்டது.