பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்510
“காகப் புள்என இனத்தொடு கலவாது ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே”1 என முன்பே கூறிவிட்டமையின் இங்கு இனம் என்பதற்குத் தமிழினம் என விரிந்த பொருள் கொள்ளப்பட்டது. தனக்குத் தீமை நேர்ந்தாலும் பரவாயில்லை; தன் மொழி, சமயம், இனம் இவற்றிற்குத் தீங்கு நேரலாகாது என்பது மிக உயர்ந்த இலட்சியம். அந்த அளவு இல்லாவிடினும் தன்னலம் எந்த அளவு பேணப்படுகிறதோ அந்த அளவாவது இவைகளும் கட்டாயம் பேணப்படவேண்டும் என்பதற்காகத் தனக்கும் என்றார்.
இம் முதல் நூற்பாவால் ஒரு புலவன் தன் செயல்களால் மற்றவற்றிற்குத் தீங்கு நேராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
(747)
106.உலகர்தம் வாய்பாடு ஒருங்கு நீத்தலும்
 சேர்த்தலும் புலமைச் சீர்க்குஇழிவு ஆமே,
பொதுமக்களின் சொற்களையும், அவர்கள் கூறும் செவிவழிச் செய்தி முதலியவற்றையும் தன்படைப்பில் சற்றும்சேர்க்காமல் முற்றிலுமாக ஒதுக்கி விடுதல், அவை அனைத்தையும் அப்படியே முழுமையாகப் பயன்படுத்தல் ஆகிய இரண்டும் புலமைத் தன்மைக்குத் தாழ்வை உண்டாக்கும் என்றவாறு,
இங்கு உலகர் என்றது தலைமைபற்றி உயர்ந்தவர்களைக் குறிக்காமல் பன்மைபற்றிப் பெரும்பாலாரைச் சுட்டியது. பெரும்பான்மையோரின் கருத்துகளுக்கும் சொற்களுக்கும் ஒரு நூலில் சற்றும் இடம் இல்லாவிட்டால் அது பாமரரிடையே பரவாது, மாறாக முற்றிலும் அத்தகையோர் சொற்களையும் கொள்கைகளையுமே நிறைத்து எழுதினால் நூல் மிகக் கொச்சையாய் முடிவதுடன் மிக விரைவில் இறந்துபடும், எனவே ஓர் இலக்கியப் புலவன் ஆன்றோர் வழக்கு பரவை வழக்கு என்னும் இரண்டிலும் கொள்வனகொண்டு, தள்ளுவன தள்ளி நூல் செய்ய வேண்டும் என்கிறார்.
(748)