பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்513
மக்கள் இலக்கியம், சமுதாய இலக்கியம், எளியோர்க்கும் பயன் தரும் இலக்கியம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கொண்டு சொற்சுவை, பொருட்சுவை, மொழி மரபு முதலிய எதனைப்பற்றியும் எள்ளளவு அறிவும் இல்லாமல் சில கவிஞர் முறையான மற்றும் ஆழமான கல்வியற்ற பாமரர்களால் பாராட்டப்பெற்றுத் தாம் பெரும் கவிஞர்கள் என்று தருக்கித் திரிவர், இவர்களில் பெரும்பான்மையோர் உண்மையான அறிஞர்களை இகழ்ந்து கொண்டும் இருப்பர், இத்தகையோரின் புலமையைக் காட்டிலும் கவிதையே இயற்றாமல் நல்ல அறிஞர்கள் மெச்சும்படியாக உரைநடை எழுதும் ஒருவனுடைய அறிவாற்றல் பலமடங்கு உயர்ந்தது என்கிறார். இக் கருத்தை இவர் வேறொரு நூலிலும் தெளிவாக, “கல்லார் பலர்புகழும் காட்சியிலும் கற்றுணர்ந்த வல்லார் சிலர்புகழ்தல் மாட்சியாம்”1 என்கிறார்,
எண்மடங்கு என்றது பல மடங்கு என்ற பொருளில். தகும் தகும் என்றது உறுதிபற்றி. உரைநடை எழுத்தாளனைவிடக் கவிஞன் உயர்ந்தவன் எனக் கருதப்பட்ட இவர் வாழ்ந்த காலத்திய இலக்கியக் கண்ணோட்டம் இந்நூற்பாவால் அறியக் கிடக்கிறது.
(750)
109.உன்னிய கருமம் உடனே முடிக்கும்
 புலமை உடையான் புயங்கமன் அனையான்
 என்னமூ துலகே இயம்பும் அன்றே.
தான் நினைத்த செயலைத் தன்வாக்குப் பலிதத்தாலேயே உடனே செய்து முடிக்கின்ற ஆற்றல் உடைய புலவனை ஆதிசேடனுக்கு இணையானவன் என்று உலகத்தவர் கூறுவர் என்றவாறு,
புலமை என்பது இலக்கிய அறிவுமட்டுமன்று; அதன் துணை கொண்டு செயற்கரிய செயல்களைச் செய்துமுடிப்பதே என்னும் இவர் கொள்கை இங்கும் கூறப்பட்டது. இது அடுத்த நூற்பாவிலும் இடம்பெறுகிறது.
(751)