|  | தொடுகடல் உடுத்த தொல்நில மகள்மலைப் | 
|  | படுகலன் நாப்பண் பதித்தநன் மணியில் | 
|  | பொலிதரு பல்வளப் புகலிமா நகர்வயின் | 
|  | கலிமறை பயில்தரு கவுணியர் குலத்தில | 
|  | நலன்உறத் தோன்றிய ஞானசம் பந்தன் | 
|  | பலமுரண் மரீஇய பறிதலை அமணரைப் | 
|  | போக்கிய ஞான்றில் புறநெறிக் கூற்றை | 
|  | நீக்கி உய்வான் நிறுவிய முறையில் | 
|  | திறம்பினர் தமையும் தெருட்டும் பொருட்டுஈண்டு | 
|  | அறம்பிழை படாவிதத்து அறுவகை இலக்கணம் (10) | 
|  | சிறக்க இயற்றுஎனச் செந்தில்எம் பெருமான் | 
|  | திறத்தகை உலவாச் சிந்தையில் தெரிப்ப | 
|  | மறக்கொணா அவன்இரு மலர்அடி வழுத்தித் | 
|  | துறக்கொணா விதிகளைத் துகள்அறக் கூறித் | 
|  | திருவுறு மாமலைச் சினகரத் தின்கண் | 
|  | அருமைசால் புலவோர்	அனைவரும் வியப்ப | 
|  | உவமைஇல் பெரியோர் உளம்நனி உவப்ப | 
|  | நுவலிய தமிழ்ப்புது நூல் அரங் கேற்றினன்; | 
|  | திருவளர் பொதியைச் செழுந்தமிழ்த் தீஞ்சுவை | 
|  | பெருகியது எனவரு பீடுஉறு பொருநையும்  (20) |