பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்543
கோட்டுஉறு பூந்துணர்க் குலவிய கொழும்தேன்
  கூட்டுஉண அளிமுரல் குளிர்நிழல் பொதும்பரும்
  உளபல உயிரையும் ஓம்புவார் தவம்என
  வளர்தரு செந்நெல் வயங்கிய வயல்களும்
  கறைமிடற்று அண்ணல் ஆதிய கடவுளர்
  உறைதரற்கு அமைத்த உயர்ஆ லயங்களும்
  அந்தணர் சைவர் ஆதியர் வாழும்
  சுந்தர மாளிகை தொக்கபல் வீதியும்
  திருமகள் கலைமகள் திறம்பா வாழ்க்கையும்
  மருவிய நெல்லை வளநகர் அதனில்
(30)
  சைவக் குலத்தில் தழைத்துஇனிது அமர்ந்தோன்;
  மெய்வைத்த நாவினன்; மேதகு மனத்தோன்;
  செந்தினா யகன்எனத் திருப்பெயர் புனைந்தோன்
  புந்திநைந்து இயற்றும் பொருவறு தவத்தால்
  தேவரும் வியப்பத் தெருள்மிகு மகவுஆய்
  யாவரும் காண இருநிலத்து அவதரித்து
  அண்டர் சேனைக்கு அதிபன்ஆ ணையினால்
  தண்ட பாணிஎனத் தனிப்பெயர் தரித்துப்
  பிறந்தநாள் முதலாப் பேசரும் அற்புதத்
  திறங்கள்பற் பலவாச் சிறந்துஉறத் திகழ்ந்து
(40)
  சிற்றெரும்பு ஒன்றைச் செகுத்தியேல் அதற்கும்
  மற்றுஎலா உயிர்க்கும் வணங்கும்உன் றனக்கும்
  நம்திரு வடிநிழல் நன்குஅளிக் குதும்என
  முந்திய முதல்வனே முன்வந்து உரைப்பினும்
  “ஐய ! அம் முத்தி அடியேற்கு ஆகாது;
  உய்யநன்கு அருள்” என உரைக்கும் உரன்உற்று
  அகத்தியன் ஆதிமெய் யடியவர் அடித்துகள்
  மகத்துவம் தெரிந்துதன் மணிச்சிரத்து அணிந்து
  மாயா வாத மருளினர் வெருள்உற
  ஓயாப் பத்தி உயர்நெறி ஒழுகி
  அலைவுறு மனத்தினர் அறியாத்
  தலைவன்ஆம் முருக தாசதே சிகனே.
(52)